Saturday, December 19, 2009

சலாம்

பொதுவாக ஒரு காக்கிச்சட்டை,
இன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் ( salute ) செய்வது வழக்கம்.

இன்றும் ஒரு காக்கிச்சட்டை,
இன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் செய்தது,
வெறும் நான்கு ரூபாய் டிக்கெட்டிற்காக.



( நான்கு ரூபாய்க்காக ஒரு காவல்துறை அதிகாரி
காலை 5 மணிக்கெல்லாம் நடத்துனரின் பல்லில் நிற்கவேண்டுமா?
எனக்கே கேவலமாக உள்ளது...
அவங்களுக்கு எதுவுமே இருக்காதா???

நம்மில் பலபேர் சில சமயங்களில் சில அல்ப சலுகைகளுக்காக கண்டவர்களிடம் மானத்தை அடகு வைக்கின்றோம் .

சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள் )

Friday, December 4, 2009

1 : 40

நேத்து அம்மா வாங்கிட்டு வந்த பச்சரிசி கிலோ 1 ரூபாய் ,

இன்னைக்கி அண்ணா வாங்கிட்டு வந்த பச்சரிசி கிலோ 40 ரூபாய் ,

ரெண்டுமே மண்ணுல தானுங்களே வெளையுது,

எதை ஊரவெச்சி, இடிச்சாலும் மாவுதானுன்களே வரும்,

ரெண்டுத்தளையும் ஒரே அளவு கார்போஹைட்ரடேட் தானுங்களே இருக்கு,

அப்புறம் ஏங்க இவ்வளவு விலை வித்தியாசம்?

எனக்கு புரியவில்லைங்க - இந்த 1 : 40 (ரேஷன் : மார்க்கெட்) கணக்கு ,

புரிஞ்சவுங்க சொல்லிதாங்க...

- நான் இல்லை ( என்னை போன்ற பலபேர் )



( ஒரு ரூபாயில் பசி ஆற்றமுடிகிறது,
ஆனால் நல்ல சாப்பாடு? )

Tuesday, December 1, 2009

போரூரும் காக்கையும்...

நீங்கள், மதியம் ஒரு 2 மணிக்கு அவசரமாக வெளியூர் போக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் .
நல்ல பசி உங்களுக்கு.
பேருந்து நிலையத்தில் ஒரு biscuit packet வாங்கி கொள்கிறிர்கள்.
பேருந்தில் ஏறியவுடன் சாப்பிட்டுவிடீர்கள். காலியான அந்த biscuit cover-ஐ என்ன பண்ணுவிங்க?????

இது தான் என் கேள்வி.


ஜன்னல் வழியே தூக்கிபோடுவீர்கள் என்றால், கிழ்கண்ட நிலை உருவாக நீங்களும் ஒரு முக்கிய காரணம்.





ஒவ்வொரு ஊரின் எல்லைகளிலும் ஊரின் பெயர் பலகை நம்மை வரவேற்கின்றதோ இல்லையோ, இந்த மட்காத plastic குப்பைகள் தான் நம்மை வரவேற்கும். அது பெரிய நகராட்சியாக இருந்தாலும் சரி, இல்லை சின்ன கிராமமாக இருந்தாலும் சரி. அந்தந்த ஊரின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குப்பைகளின் அளவு இருக்கும்.

காலி மனைகளில், மின்சார கம்பத்தின் அருகில், கோவில்களின் அருகில், கடைதெருவில், மருத்துவமனைகளின் பக்கத்தில், எங்கு நோக்கினும் பிளாஸ்டிக் கழிவுகள்.

எல்லாமே use and throw தான்.
நாம் போடும் குப்பைகளின் நிலை பற்றி ஒரு கவலையும் இல்லை நமக்கு. தயவு செய்து கொஞ்சம் அவற்றின் நிலை பற்றி எண்ணிபாருங்கள்.

பஸ்ல வாங்கற டிக்கெட்-ல இருந்து, ATM bills, ice cream cover, cigarette cover, biscuit cover, chocolate cover (மன்னிக்கவும்) இவை எல்லாம் நாம் ஒருவர் மட்டும் தினசரி வெளியில் தூக்கிபோடும் குப்பைகள்.


( மூணாரில் எடுக்கப்பட்டது )


ஒருவரால் மட்டும் இவ்வளவு என்றால்?
யோசித்து பாருங்கள், நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் தினமும் எவ்வளவு குப்பைகள் பொறுப்பில்லாமல் மிக சாதாரணமாக வெளியில் தூக்கி எறியப்படுகின்றது என்று.

நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான இடம் போரூர் (சென்னை). ஒரு பிளாஸ்டிக் மலையே நம்மை வரவேற்கும். அதிலும் ஒரு முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கால் வைக்கவே முடியாத இடத்தில், அதாவது குப்பை மேட்டின் நடுவில் அங்கு மாட்டிறைச்சி விற்று கொண்டிருப்பார்கள். பேருந்தில் இருந்து பார்க்கவே சகிக்காது. நீங்கள் போரூர் வந்திருந்தால் தெரியும், அங்குள்ள குப்பைகளையும், காக்கைகளையும்.




அழகான இந்த பூமியை, சகிக்க முடியாத இடங்களாய் மாற்றியது யார்?

நாம்.
நாம்.
ஆறறிவு கொண்ட நாம் மட்டும் தான்.

இந்த குப்பைகளையும், இந்த இடங்களின் தலைஎழுத்தையும் நம்மால் மாற்றமுடியும். நம்மால் முடியாதது என்று உலகில் ஒன்றும் இல்லை.

பிறரை சொல்லி குற்றம் இல்லை. மாற்றம் நம்மிடம் இருந்து உருவாகட்டும். நம் முதுகில் உள்ள அழுக்கை முதலில் அகற்றுவோம்.

1. முறையான இடங்களில் குப்பைகளை போட கற்றுகொள்வோம்.

2. இனி ஒவ்வொரு முறை நீங்கள் குப்பைகளை குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை போடும்போதும் சரியான இடத்தில் தான் போடுகிறோமா என்று ஒரு பொறி தட்டட்டும்.

3. உங்கள் வீட்டில் இருந்து வெளியாகும் குப்பைகளை எங்கு, எப்படி வெளியேற்றுகின்றிர்கள் என்பதை பாருங்கள்.

4. நீங்களோ அல்லது உங்கள் வீட்டாரோ திறந்த வெளியில் கொட்டினால் தயவு செய்து அந்த முறையை மாற்றவும்.

5. மட்கும் குப்பையை வீட்டின் வெளியில் ஒரு குழி தோன்றி அதில் கொட்டலாம். ( இப்போது என் வீட்டில் உள்ள மட்கும் கழிவு குழியில் ஒரு மாங்கன்று முளைத்துள்ளது :-) )

6. சாதாரண தினசரி காலண்டர் பேப்பர் முதல், plastic cover, அட்டைகள் எல்லாவற்றையும், வீட்டிலேயே ஒரு குப்பைத்தொட்டி ஏற்பாடு செய்து, அவற்றில் நிரப்பி, பின் முறையான வழிகளில் அப்புறபடுத்துங்கள்.

பிளாஸ்டிக் கழிவுகளை முறையாய் அப்புறபடுத்தும் வழிகளை வேறொரு பதிவில் பார்ப்போம்.

(சில நகராட்சிகளே சேகரிக்கும் குப்பைகளை, முறையான வழியில் அப்புறபடுத்தாதது வேதனைக்குரிய விஷயம்.)

சரி, இப்பொழுது முதலில் ஆரம்பித்த செய்திக்கு வருவோம். ஒருவேளை அந்த biscuit cover - இல் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மீதம் இருந்தால் அப்படியே மடித்து பையில் வைத்து வீட்டுக்கு கொண்டுபோகும் நாம், ஏன் காலியான கவரையும் பையில் வைத்து வீட்டுக்கு கொண்டுபோய் குப்பை தொட்டியில் போடகூடாது.
வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால், இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்ய தவறி தான் மிகப்பெரிய குப்பை மலைகளை உருவாக்கியுள்ளோம்.

கொஞ்சம் மண்ணையும் நேசிப்போம்,
தயவு செய்து கொஞ்சம் பிறர் மண்ணையும் நேசிப்போம்.


( சொல்லனும்னு தோணிச்சு சொல்லிவிட்டேன் , பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். சுற்றுச்சுழல் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னுடன்களாய் பகிர்ந்தால், பிறரும் பயன்பெறுவார்கள், மண்ணும் சுத்தமாகும் )




Wednesday, November 25, 2009

கோவிலுக்கா?

பிள்ளையார் கோவிலை விட்டு நானும் என் தோழியும் வெளியில் வந்தோம், அடுத்து அன்னைமார் கோவிலுக்கு போவது வழக்கம், வழியில் ஒரு சினேகிதியை சந்திக்க நேர்ந்தது. அவள் சிநேகமாய் புன்னகைத்தாள்,
"எங்க கோவிலுக்கா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே, என்ன விசேஷம்??" என்றாள் அவள், பெருத்த வியப்புடன்.
பதிலை நான் தேடுகிறேன்...
.
.
.
என் முதல் பதில், நான் இந்து குடும்பத்தில் பிறந்ததால் என்பதாக தான் இருக்கும்.

என்னை பொறுத்தவரை கடவுள் என்பது ஏதோ ஒரு சக்தி அவ்வளவுதான். இது தான் கடவுள், இப்படி தான் இருப்பார், இப்படி தான் பூஜிக்க வேண்டும், என்பதில் துளியும் நம்பிக்கை இல்லை.

ஏன் விழுகிறோம், ஏன் எழுகிறோம் என்று தெரியாமல் விழுந்து கொண்டும், எழுந்து கொண்டும் இருக்கின்றோம். எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் சொல்லுவாங்க ஆனால் விளங்கவில்லை அவர்களின் விளக்கங்கள்.

மதம், பக்தி என்பதற்கு பொருள் தெரியவில்லை, உண்மை அதுதான். தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.
ஆகவே,
எனக்கு மாரியம்மனும், மாதாவும் ஒன்று தான். மனிதன் பெரும்பாலும் தன் வேண்டுதல்களை கொட்டும் ஒரு இடமாகத்தான் கோவிலையும், சர்ச்சையும், இன்ன பிறவற்றையும் எண்ணுகிறானோ? என்று ஒரு ஐயம் எனக்கு உண்டு. அதையும் மீறி அவற்றை ஒரு கலை நோக்கோடு பார்ப்பவர்களும் உண்டு.

எல்லா மதத்து நட்பும் எனக்கு கிடைத்தது. பள்ளியில் முஸ்லிம்கள் அதிகம், தற்போது படிப்பது கிருத்துவ சிறுபான்மை கல்லூரியில், என்னை போலவே என் தோழிகளுக்கும் பைபிளில் நிறைய சந்தேகங்கள், கேள்விகள் இருப்பது தெரிய வந்தது. பைபிளில் ஏன் கடவுள்(இயேசு) அப்படி செய்தார் என்று காரமாய் விவாதிப்பார்கள். திருபலிகளுக்கும் செல்வேன்(வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது).

ஒரு முறை அம்மாவுடன் church-ஐ கடக்க நேர்ந்தது. அவ்வளவு அழகாய் இயேசு நாதர் கைகளை விரித்து அழைத்து கொண்டிருந்தார். பார்த்ததும் பரவசத்தில் பிதா சுதனின் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென், என்று சொல்லிக்கொண்டே சிலுவை போட்டாச்சு. அம்மா "ஓய்" என்றார். அர்த்தம் நான் சொல்ல வேண்டியது இல்லை.

கேள்விகள் விளக்கங்கள் எல்லாம் இருக்கட்டும், எனக்கு பிடித்ததை செய்கிறேன். சண்டிகேஸ்வரரை தியானத்தில் இருந்து எழுப்புவது பிடிக்கும், செய்கிறேன்...
திருபலியில் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்வது பிடிக்கும், செய்கிறேன்...
பக்தி எல்லாம் இல்லை.

காலையில் தமிழ் கடவுளுக்கு 'good morning god' என்று அபத்தமாய் சொல்லுவேன். இதுவும் பிடிக்கும்.

எந்த மதத்து கோவிலாய் இருப்பினும் பொதுவாய் என் வேண்டுதல் குழந்தை பருவத்தில் சொல்லி கொடுத்தது தான்.
"சாமி... எல்லாரும் நல்ல இருக்கணும், நல்லபடியா படிக்கணும், அவங்களுக்கு உடம்பு சரியா போய்டணும், அது அப்படி நடக்கணும், இது இப்படி நடக்கணும்"

இதை இருந்த இடத்தில் இருந்தே கூட வேண்டலாம்...

" திருப்பதி போய் 2 நாள் கூண்டில் இருந்து, பின் பெருமாளை பார்த்ததும் கண் மூடி வேண்டும் நம் மக்கள் " என்று என் ஸ்ரீஜித் ஐயா சொல்லுவார்.

முன்பு ஒரு முறை கடவுள் பற்றிய விவாதத்தில் என் தோழன் பீட்டர் சொன்ன கருத்து இங்கே ஏற்றதாக இருக்கும்,

laplace wrote a book on how the planets worked
napolean asked him
smiling
"why is there no mention of god here?"
laplace replied
"I have no need for such a thing"

இந்த கருத்தில் உடன்பாடு இருக்கோ இல்லையோ , என் ஊர்க்காரர் சொன்ன கருத்தில் உடன்பாடு உண்டு

"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"

நாளும் இங்கு இறைவனை தரிசிப்போம், தரிசிக்க முயலுவோம்.

ஏன் இன்று கோவிலுக்கு வந்தேன்?


இரண்டாம் பதில், என் தோழிக்காக... அவள் தினமும் கோவிலுக்கு செல்வது வழக்கம். முன்பு ஒரு நாள் என் நண்பனின் பிறந்தநாள் ஆகையால்,
நானும் இன்று உங்களோடு கோவிலுக்கு வரேன், என்றேன் என் 75 வயது தோழியிடம். அவங்களோட புது பழக்கம் தொடங்கிய காலம், அது தான் முதல் முறை நான் அவங்களோட கோவிலுக்கு போறது.

நவகிரகம் சுத்தி முடித்ததும் பாட்டியோட முகத்தை பார்க்கவே முடியவில்லை, மயக்கம் வந்தது போல் காணப்பட்டார். 2 வாரம் பாட்டியை தனியா கோவிலுக்கு போக விட்டது தப்பு என்று தோன்றியது.

நாட்கள் நகர நகர, வழியில் தென்படும் இரட்டைவால் குருவிகள், அந்த திறந்தவெளி அன்னைமார் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் இரு அரசமரங்கள், வெப்ப மரம், வில்வமரம், அரசமர சுற்று சுவற்றில் உள்ள பாசிகள், கோவில் மணி, தினமும் படித்து கொண்டிருக்கும் ஒரு சிறுவன், சிவக்கும் வானம், மேகங்கள் எல்லாம் என் விருப்பமானவை ஆயின. தினமும் இவற்றை ரசிப்பது வாடிக்கை ஆகிவிட்டது.

என் 75 வயது பாட்டிக்கு எத்தனை வேண்டுதல்கள் இருக்குமோ தெரியாது. அவருடன் துணைக்காக நான், என்ற சாக்குடன் மேற்சொன்ன அனைதிற்க்காகவும் தினமும் கோவிலுக்கு வருகிறேன்.
பக்தி அல்ல...
.
.
.
அவள் சிநேகமாய் புன்னகைத்தாள், "எங்க கோவிலுக்கா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே, என்ன விசேஷம்??"என்றாள் அவள், பெருத்த வியப்புடன். சற்று நேர மௌனத்திற்கு பின்,
நானும் என் 75 வயது தோழியும் சேர்ந்தே பொய் சொன்னோம்,
"சும்மா தான் "...

Saturday, November 14, 2009

ஏன் பெண்ணாய் பிறந்தேன்?



நகரவும் வழியில்லை புறநகர பேருந்துகளில்
நிற்பதில் நான் மட்டும் பெண்
உரசிக்கொண்டே இருக்கின்றான் ஒருவன்
பட்டாம்பூச்சி மீண்டும் புழுவானது
இன்னும் என்னால் நகர முடியாது என்கிறது கடைசி இருக்கை
திரும்பி பார்க்கவும் வழி இல்லை
பாவம் நிற்க இடம் இல்லை போலும், என்று நினைத்து கொண்டேன்
அவன் கீழே இறங்கியவுடன், நடத்துனர் கேவலமாக திட்டினார் அவனை
அப்போதுதான் உணர்ந்தேன் அந்த ஈன பிறவியை
"கன்னத்திலே ஒண்ணு விட கூடாதம்மா " - நடத்துனர்
என்ன செய்வேன் நான்
நடப்பது தவறு என்று கூட நினைக்காதவள்

எது எப்படி இருப்பினும் அவனை ஈர்த்தது என் வெற்று உடல்
எரித்துவிட்டேன் என் உடலை தீயில்
இறந்துவிட்டேன் சில நிமிடங்கள்
ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்ற கேள்வியுடன்,
என் பிணத்தின் முன் அழுதது வானம் வெளியில்...

எந்த நேரத்தில் சொன்னானோ தெரியவில்லை, பாரதி-
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா...





( சில நேரங்களில் பேருந்துகளில் பெண்கள், பிணங்களாய் பயணிப்பதை எடுத்துரைக்க )

Monday, November 9, 2009

நானும் தீபாவளியும்...

அன்பு நண்பன் அகல் விளக்கு அழைத்ததால் தொடர்கிறேன் இந்த தொடர் பதிவை...

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

கனிமொழி - கற்பது கணினி, இறுதி ஆண்டு பொறியியல் மாணவி... மனிதர்களையும் அவர்களின் அழகான நிலை மாறும் மனதையும் மிகவும் நேசிப்பவள். புரியாத புதிர்களுக்கு விடை தேடுவது பகுதி நேர வேலை.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

என் தோழி வசந்திக்கு ஏற்பட்ட தீக்காயங்கள்... பட்டாசுகளில் இருக்கும் மருந்துகளை தனியே எடுத்து அவள் கொளுத்தியதால் ஏற்பட்டது. அந்த விபத்து நடக்கும் போது நான் அருகில் இல்லை, ஆனால் அவள் கைகளை பார்த்ததும் அழுதுவிட்டேன். விளையாட்டு வினை ஆகிவிடும் என்பதை உணர்த்திய முதல் வாழ்க்கை பாடம், எனக்கு.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

காலையில் காஞ்சிபுரம், பின் மறுநாள் நோன்பிற்காக படப்பை ( பாட்டி வீடு )

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருப்பதால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை, காலை முதல் மாலை வரை எங்கள் தோட்டத்தில் ஒரே பட்டாசு சத்தம் தான்...

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்க‌ளா ?

தீபாவளிக்கு புத்தாடை இல்லை என்பது அப்பாவின் அன்பு சொல், நானும் வற்புறுத்த மாட்டேன்...

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

எதை சொல்வது எதை விடுவது, சிலதை அம்மா செய்தார்கள், சிலதை வாங்கினார்கள்... நோன்பு என்பதால் அதிரசம் தான் ஸ்பெஷல்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

மின்னஞ்சல், தொலைபேசி, நேரிலும் ...

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

அன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவன் சத்தியமாக மிகவும் பொறுமையானவன். நான் அந்த சாதி அல்ல... நிறைய உறவினர்கள் வீட்டுக்கு வருவாங்க அவங்க கூட இருந்தாலே நேரம் கழிவதே தெரியாது.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

என்னிடம் செலவு செய்ய மனம் உள்ளது ஆனால்,...
ஆகையால் என் பங்காக வரும் பட்டாசுகளை நான் வெளியில் மத்தாப்பு கொளுத்தும் போது அதை ஆசையை வேடிக்கை பார்க்கும் குழந்தைகளுக்கு தரும் பழக்கம் உண்டு. இந்த தீபாவளியிலும் அதை செய்ய வாயப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி...

10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

போதும் இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் ...
:-)

Sunday, November 1, 2009

உடன்பிறப்புகள்...


இந்த ஒரு வாரத்திற்குள் நான்கு முறை சென்னைக்கு செல்ல நேரிட்டது. பொதுவாகவே பயணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த ஒரு வார பயணத்தில் இருந்து நான் தெரிந்துகொண்டது இதுதான்...
தனி மனித ஒழுக்கம் குறைந்து கொண்டே வருகிறது...
சுற்று சுவர், நடை பாதை, நெடுஞ்சாலை ஓரங்கள், குப்பை மேடுகள், கால் வைக்கவே முடியாத இடங்கள், பொதுவாக - பொது இடங்கள்... எதையுமே விட்டு வைப்பதில்லை என் உடன்பிறப்புகள்... புரிந்திருக்கும் என் நெஞ்ச எரிமலையில் என்ன கொதிக்கிறது என்று...
ஆம், கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பது தான்... இதுவும் ஒழுக்கமற்ற செயலே...
ஆட்டோ ஓட்டுனர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள்... யாராக இருந்தாலும் சரி, ஒரு ஓரமாக திரும்பி கொள்வது, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 100 பேர் இருந்தாலும் சரி...
ஒரு துளி சிறுநீரில் எத்தனை லட்சம் பாக்டீரியா, வைரஸ் உள்ளது என்று தெரியுமா என் உடன் பிறப்புகளுக்கு???
இந்த ஒழுக்கமற்ற செயல்களை பார்க்கும் போதெல்லாம் ரத்தம் கொதிக்கும் எனக்கு... நானே என் மனதிடம் கேட்பேன் ஏன் கனி வர வர அம்பி மாதிரி யோசனை செய்கிறாய் என்று... என் மனம் பதில் உரைத்தது இல்லை.
ரொம்ப ஒழுங்கா இருக்கின்றவர்கள் கூட சுற்றுலா தளங்களுக்கு செல்லும் போது ஏனோ ஒழுக்கங்களை மறந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே இருக்கின்ற நோய்களுக்கு பஞ்சம் இல்லை...
யோசிப்போம்...
மாசுபடுதல் பற்றி நிறைய படிப்போம், பேசுவோம், ஆனால் அது யாரோ எவரோ செய்வது என்று ஒரு எண்ணம் என் உடன்பிறப்புகளுக்கு...
என்னை பொறுத்தவரை ஒரு பயண சீட்டை ரோட்டில் போடுவது கூட மண்ணை மாசு படுத்தும் செயல் தான், அந்த சீட்டு மட்கும் வரை...
plastics -அதை பற்றி தனி பதிவே போடலாம்...

கோயம்பேடில் இருந்து திருவான்மியூர் சென்ற பேருந்தில்,
ஜன்னல் ஓர இருக்கை... பயணத்தில் எதிர் படும் ஒவ்வொன்றையும் கவனிப்பேன்... அப்படி வேடிக்கை பார்க்கும் போது ஒரு இளைஞன், நல்ல ஆடை, leather shoes, bag, mobile with headset ( மன்னிக்கவும் ) , பேருந்து நிறுத்தம் ஆகவே
கொஞ்ச நேரம் பேருந்து நின்றது, அவன் ஒரு தெருவில் இருந்து வருகின்றான் எதிரில் ஒரு குப்பைமேடு சாதரணமாக எச்சில் உமிழ்கிறான் இந்த உடன் பிறப்பு,
அந்த குப்பைகளை அல்லபோவதும் என் உடன்பிறப்புதான்...
யோசிப்போம்...

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

இதையும் யோசிப்போம்...

Sunday, October 25, 2009

என்னுடைய சைக்கிள்...


அன்று ஆயுதபூஜை, கொஞ்சம் உடம்பு சரி இல்லாததால் அசந்து தூங்கிவிட்டேன். மணி பிற்பகல் 2.30 , திடீரென்று தோன்றியது சைக்கிளுக்கு பூஜை போடவில்லையே என்று. உடனே எழுந்து வாசலுக்கு போய் பார்த்தேன் சைக்கிளை காணவில்லை.
"அம்மா சைக்கிள் எங்க?"
"பப்லூ எடுத்துட்டு போய் இருக்கான் மா" என்றார்கள் அம்மா.
பப்லூ - கடைசி மாமா பையன், பெயர் லிங்கேஷ்வரன், பத்தாம் வகுப்பு, என்னுடைய சைக்கிள் எடுத்துக்கொண்டு தான் வெளியில் போவான்.
எதிர் வீடு.

நேரே மாமா வீட்டுக்கு சென்று சைக்கிளை எடுத்தேன். என்னை பார்த்த சச்சின் ( நாய் ) செல்லமாய் குறைத்து, மாமி நாயின் குரல் கேட்டு வெளியில் வந்தார்கள், அதற்க்குள் நான் மாமா வீட்டின் கேட் தாண்டி வந்துவிட்டேன்.

"பூஜை போட போறியா மா, பப்லூ போடலாம்னு எடுத்து வந்தான்" என்றார்கள் மாமி.
"யார் சைக்கிளை, யார் பூஜை போடுவது " மனதில் தோன்றியது.

என் நீண்ட கால உறவை யாரோ பறிப்பது போல் ஒரு கலக்கம். பின்புறம் தொட்டியின் பக்கத்தில் சைக்கிளை நிறுத்தி கழுவினேன்.
.
.
.
முதன்முதலில் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை தோன்ற காரணமாக இருந்தவன் தமிழ்செல்வன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சைக்கிளில் வந்த முதல் மாணவன் , என் வகுப்பு தோழன். பள்ளி முடிந்ததும் அவனுடைய சைக்கிளை சாந்தி, ஷாகுல் , ரம்யா எல்லாரும் ஓட்டுவாங்க, நான் மட்டும் சும்மா இருப்பேன். அப்போது தான் இந்த முழு ஆண்டு லீவ் ல சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னு நெனச்சேன்.

எல்லா விடுமுறைகளுக்கும் ஆயா வீட்டுக்கு வருவது வழக்கம், உறவினர்கள் எல்லாரும் பெரும்பாலும் வந்துவிடுவார்கள். ராஜி தான் சைக்கிள் ஓட்ட கற்றுதந்தான். என்னைவிட 3 மாதம் பெரியவன். தோட்டத்தில் போய் தான் கற்றுத்தந்தான் பெரும்பாலும் சைக்கிள் மற்றும் வண்டி ஓட்ட பழகுபவர்கள் பயன்படுத்தும் இடம். தோட்டத்து கேட் கிட்ட ஏத்தி விட்டன்னா சுடுகாடு வரை ஓட்டி கொண்டு போய் திரும்பவும் தள்ளி கொண்டு வருவேன் . தானாக ஏற தெரியாது, காமெடி ஆக இருக்கும். அப்புறம் தோட்டத்து பக்கம் வந்த அப்பா தான் ஏற கற்று தந்தார். பிறர் எனக்கு கற்றுதர முடியாத, எனக்கு கஷ்டமாக இருந்த பலவற்றை அப்பா தான் கற்றுத்தந்து இருக்கிறார். அப்பாவிடம் இருந்து நான் கற்று கொண்டது ஏராளம்.

நான் வளர வளர என் சைக்கிளும் வளர்ந்தது.

முதலில் குட்டி வாடகை சைக்கிள் பயிற்சிக்காக.
பின் லேடிபிர்ட் (lady bird) - என்னுடைய முதல் சைக்கிள் ஆறாவதில் முதல் மாமா வாங்கித்தந்தது.
லேடி பிர்ட் சைக்கிள் பத்தி நினைச்சாலே, ஏழாம் வகுப்பில் நடந்த குட்டி விபத்தும்,
சுடுகாட்டை கடந்து மேல்படப்பையில் இருந்து கீழ்படப்பை செல்லும் போது முருகா , முருகா என்று சொல்லிக்கொண்டே பயந்து, பயந்து சைக்கிள் ஓட்டுவதும் தான் நினைவிக்கு வரும். அந்த சைக்கில போகும் போது தான் அப்பா முதல் முறை வலியால் துடிச்சதை பார்த்தேன். என் வாழ்கையில் முதல் வலியை ஏற்படுத்திய மறக்க முடியாத தருணங்கள், வந்து போகும்.

பின் காஞ்சிபுரம்...
இங்கு வீட்டுக்கும் பள்ளிக்கும் 2 கி.மி . மெயின் ரோட் அதனால் யாராக இருந்தாலும் ஒரு வருடம் நடந்து தான் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பது தாத்தாவின் அன்பு கட்டளை. ஒன்பதாம் வகுப்பு முழுவதும் சைக்கிள் இருந்தும் நடந்தே பள்ளிக்கு செல்லும் நிலைமை .
வந்தாச்சி பத்தாவது, நான் லேடி பிர்ட் எடுத்தால் தம்பி சண்டைக்கு வந்தான், என்னை மாமா சைக்கிலில் போக சொல்லி பெரிய சண்டை. என்னெனில் அது ரொம்ப பழசு. அக்காவாச்சே விட்டுதந்துட்டேன்.

இப்ப B.S.A ... இந்த கிராமத்தில் ஒரு பழக்கம் மாடுகளை நீண்ட கயிறால் கம்பதிலோ, பெரிய செடியிலோ கட்டி மேயவிடுவர்கள். அது சரிnயா ரோட்டுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் இழுத்துக்கிட்டு நிக்கும். இதெலாம் எனக்கு அப்ப புதுசு. படப்பைல மாட்ட பார்ப்பதே அதிசியம்.
ஒரு முறை ஒரு கன்றுகுட்டி அப்படி நின்று கொண்டு இருந்தது, கயிறு தரையை தொட்டு கொண்டு தான் இருந்தது சரி அப்டியே ஓட்டிக்கொண்டு போகலாம்னு நெனைச்சி ஓட்டினேன். அது என்ன நினைத்தோ தெரியவில்லை, ஒரு டயர் அந்தப்பக்கம் போனதும், கயிறை இழுத்துகிச்சி. அவ்ளோதான் கீழ விழுந்துட்டேன்.
யாராவது பார்க்கிறார்களான்னு சுத்தி முத்தி பார்த்தேன். நல்ல வேலை யாரும் பாக்கல. எனக்கு அப்போது கோபம் எல்லாம் சைக்கிள் மீதும், கன்று குட்டி மீதும் தான். வீட்டில் சொல்லகூடாது சொன்னால் சைக்கிள் தர மாட்டார்கள் என்று முடிவு பண்ணி சைக்கிள் ஓட்டினேன்.

அப்புறம் பதினோராம் வகுப்பு, கொஞ்ச நாள்லே தமிழக அரசு தந்த சைக்கிள் தான் இப்ப என்னோட சைக்கிள். :-)

எல்லாரையும் விட சில சமயம் அதிகம் பேசியது அவளிடம் தான்.
உடம்பு சரி இல்லாத போதெல்லாம் நான் கொஞ்சம் மிதித்தால் போதும் அதிகதூரம் போவாள்.
ஒரு முறை கூட பின்னால் வைத்த புத்தக பையை, கிழே விழ விட்டதில்லை, பையையே கிழ விழ விடாதவள் என்னை எப்படி விழ வைப்பாள்.
ஆனால் பாவம் அவள், நான் மோசமாக பாடுவதையும், அமைதியாய் கேட்பாள்.
தேர்வுக்கு முன் படித்ததை எல்லாம் சைக்கிளில் போகும் போது மனதில் சொல்லி பார்த்துக்கொண்டு போவேன், தப்பா இருந்தாலும் கேட்பாள் அவள்.
நான் யாரெல்லாம் சைட் அடிச்சேன்ன்னு கூட அவளுக்கு தெரியும்.

பள்ளி காலம் முடிந்ததும், கல்லூரி சென்னையில் என்பதால் விடுதி.
அதனால் சைக்கிளை பயன்படுத்த வாய்ப்பே இல்லை.
விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது, தோட்டத்தையும், சுடுகாட்டையும் தாண்டி , ஏன் பாலாறு வரை கூட அவளுடன் போவேன்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அவளை பற்றி...
.
.
.
கழுவிவிட்டு துடைக்கும் போது கண்ணில் பட்டது, நான் கனி என்று அவள் மீது
ஒட்டி இருந்தது...

Thursday, October 22, 2009

வணக்கம்

மெல்லிய சிலிர்தளுடன்
மலர்கிறது இந்த வலைப்பூ...
விதை விதைத்தவரையும்,
தண்ணீர் ற்றபோகின்றவர்களையும்,
களை எடுக்கபோகின்றவர்களையும்,
அன்பு கலந்த நன்றியுடன் வரவேற்கிறது -- இந்த
உதிர்ந்த மலர்...