Thursday, June 24, 2010

வெட்டி....

எப்போதாவது வெட்டியாக இருந்தால் பரவா இல்லைங்க. எப்பயுமே வெட்டினா.....
செம போர்..

கல்லூரி முடித்து கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே முடங்கியுள்ளேன்.
வேலைக்கு எடுத்த கம்பனியோ, எப்போது அழைக்கும் என சொல்லவே இல்லை. குறைந்தது மூன்று மாதம் ஆகும் என நம்புகிறேன்.

அம்மா ஊர் சுத்தவும் விட மாட்டேன்றாங்க. :(

ஏதாவது ஒரு வேலை செய்து எப்படியாவது இருக்கின்ற நேரத்தை உபயோகமாக மாற்றிக்கொண்டு இருக்கேன்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு படமாவது பார்க்கின்றேன்.

அடுத்து புத்தகங்கள், சேட்டன் பகத்-இன் நாவல்கள் " One night at the call center", " Two states ". இரண்டும் படிச்சுட்டேன். இப்பொழுது " தீண்டாத வசந்தம் " படித்து கொண்டிருகின்றேன். இது ஒரு மொழி பெயர்கப்பட்ட நாவல். நாவல் முழுக்க, வலிகள் நிறைந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சு குமுறல்கள்.

மேலும் ஹிந்தி கற்றுக்கொண்டு வருகின்றேன். :)

சனி, ஞாயிறு காலையில் மட்டும் வகுப்பு. பெரும்பாலும் எல்லாருமே ஒன்னாவது, ரெண்டாவது பசங்க. அவங்களோட சேர்ந்து க, கா, க(ga), க(gha) என்று படிக்கின்ற சுகம் இருக்கே.......

ஹிந்தி சார், நக்கலாய் கேட்கும் கேள்விகளுக்கும், வெள்ளந்தியாய் பதில் சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க... அந்த வெள்ளந்தி சிரிப்பெல்லாம் மரணித்து விட்டது நமக்கு.
"அக்கா உன்னோட பேர் என்ன?" இந்த கேள்வியை ஒரு குட்டி பொண்ணு நான் சென்ற முதல் நாள் மூணு முறை கேட்டுச்சு.

ஆனால் நம்ம, யாராவது பேர் சொன்ன அடுத்த நொடியே மறந்து போனாலும், ஈகோவினால் திரும்ப கேட்க கூட மாட்டோம். மறுபடியும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தெரியத்தானே போகுது என விட்டுவிடுவோம் இல்லையா... :)

அப்படியும் வார நாட்கள் வெட்டியாய் கழிகின்றனவே என சுவற்றை பார்த்து யோசிக்கையில் ஒரு போஸ்டர் வரைந்தால் என்ன?.. என ஒரு எண்ணம் எழ தூரிகையை கையில் எடுத்தேன்.

நல்லா இருக்கா???? :)

ஒரு மகிழ்ச்சியான செய்தி, எங்களின் போட்டோ ஒன்று இந்த மாத PIT - இன் முதல் கட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஒரு அடி முன்னேறி இருப்பதே மிகப் பெரிய மகிழ்ச்சி... தலைப்பும் மகிழ்ச்சியே...அடுத்து car driving கற்றுக்கொள்ள அம்மாவிடம் பிட்டு போட்டுள்ளேன்.. ஹிஹிஹி...

இன்னும் உபயோகமாய் கழிக்க என்ன செய்யலாம் இந்த வெட்டி நாட்களில்.....????
சமூகசேவை ?
எங்கு எப்படி செய்யலாம் என யோசித்து கொண்டுள்ளோம் நானும் தோழியும்.

யாரை அணுகுவது என தெரியவில்லை.
உங்களுக்கு ஏதேனும் யோசனை இருந்தால் பின்னுட்டத்தில் தயவு செய்து தெரிவிக்கவும்.

Wednesday, June 16, 2010

நாற்பத்து இரண்டும், நாமும்...


நம் வாழ்க்கை மற்றும் , இந்த அண்டம் பற்றிய நமக்கு விடைத்தெரியாத பல கேள்விகளுக்கும், விடை '42' தான் என்றான் என் நண்பன்.

உங்களைப்போலவே நானும் திகைத்தேன் '42' தானா அத்தனைக்குமான பதில் என்று.
கூகுளில் சென்று உன் கேள்வியினை அளி, என்ன தருகின்றது என்று பார் என்றான்.

அவன் கூறியது போலவே " The Hitchhiker's Guide to the Galaxy "யும் அடுத்ததாக நாற்பத்தி இரண்டும் வந்து நின்றது..

அப்படி, என்ன தான் நாற்பத்தி இரண்டில் உள்ளது என்பதை தேடினேன்.
கணிதவியலில் பல்வேறு சிறப்பு தொடர் எண்களில் நாற்பத்து இரண்டு மட்டுமே வருகிறதாம்.

அறிவியலில், வானவில்லின் கோணம் 42 டிகிரி.

அடிப்படை மாறிலிகளான (Constants) ஒளியின் வேகம் மற்றும் பூமியின் விட்டம் வைத்து ஒரு கோட்பாட்டினை (theory) கூறுகிறார் 'பால் கூபர்'. அதாவது பூமியின் மையக்கோட்டில் ஒரு புறத்தில் இருந்தது இன்னொரு புறத்திற்கு துளையிட்டு, ஒளியினை செலுத்தினால் அது மறு புறம் செல்ல எடுத்து கொள்ளும் கால அளவு 42 நிமிடம். வியக்கதக்க வகையில் பூமியின் மையக்கோடு வழி அந்த துளை செல்லவில்லை என்றாலும், ஒளியின் பயண நேரம் 42 நிமிடம் தான் ஆகிறது. இதனையே 'லெவிஸ் கரோல்' என்பவரும் தன் ஆய்வின் மூலம் கூறுகிறார்.

மேலும் பைபிளில் பல்வேறு இடங்களில் நாற்பத்து இரண்டினை சுட்டி காட்டுகிறார்கள். பைபிள் பக்கம் போக வேண்டாம் ஏனெனில் அதனையே கேள்வி குறியோடு நோக்கும் ஆட்கள் நாம்(நான்).

The Hitchhiker's Guide to the Galaxy -
படத்திலும் நாற்பத்தி இரண்டை குறிப்பிட்டு இருப்பார்கள், இருப்பினும் அது ஒரு fiction கதை மட்டுமே.

மேலும் 9 * 6 = 42 ஆம் ( பேஸ் 13 ).................

'வசூல் ராஜா MBBS படத்தில்' வரும் லக்கி நம்பர் 7 கதையாக உள்ளது. :)

இது மட்டும் அல்லாமல் எந்த ஒரு search engine னில் தேடினாலும் அக்கேள்விக்கு விடை 42 வருமாறு program செய்யப்பட்டதும் ஏனோ?

'நம் வாழ்க்கை மற்றும் , இந்த அண்டம் பற்றிய நமக்கு விடைத்தெரியாத பல கேள்விகளுக்கும், விடை '42' தான்' என்பது உண்மையோ, பொய்யோ, அல்லது 42 என்பது Douglas Adams எடுத்து விட்ட ஒரு சமவாய்ப்பு இலக்கமாகவோ (Random number ) இருக்கலாம்.

எனினும், நாம் தெரிந்து கொள்வோம் நாற்பத்து இரண்டை பற்றி.

...................................................................................................................

The Hitchhicker's guide to the galaxy - புத்தகத்தின் ஆசிரியர் Douglas Adams

42 தான் உண்மையான விடை என்றாலும் நம் புலனறிவு அதனை ஏற்றுக்கொள்ளாது. :)
ஏனெனில்,
நம் மூளையானது அதன் புலனறிவுகளால் வரையறுக்கப்பட்டது. அதன் வரையறைக்கு மீறிய ஒரு உறுபொருளை அதனால் புரிந்து கொள்ள முடியாது .

விடை தெரியாத அத்தனை கேள்விகளுக்கும் இது பொருந்தும்.

Wednesday, June 9, 2010

கேள்விகள் துளைத்துக்கொண்டே தான் இருக்கின்றது..


கூண்டில் அடைப்பட்ட குருவியும் நாமும் ஒன்றோ?

எதற்காக நாம் வாழ்ந்து கொண்டு இருகின்றோம்?

இக்கேள்வி இன்று காலை முதல் என்னுள் துளை இட்டு கொண்டு இருக்கின்றது.

நாம் வாழும் இந்த வாழ்க்கை முறை நமக்கு பிடித்து இருக்கின்றதா?

வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குளாகவே வாழ்ந்து கொண்டு இருகின்றோம்.

வரையறுக்கப்பட்ட கல்வி, உணவு, வாழ்க்கை முறை.

ஒப்புகொண்டாலும், மறுத்தாலும் பணத்தின் பின்னால் ஒரு ஓட்டம்.

ஒரு வேலை பணம் என்ற ஒன்றே இல்லாமல் இருந்து இருப்பின் இவ்வுலகம் என்னவாக இருந்து இருக்கும்?

கேட்டேன் நண்பனிடம் "எதற்காக நாம் வாழ்ந்துகொண்டு இருகின்றோம்?" என்று.

அந்த கேள்வியை தூக்கி எறி என்றான் ஒற்றை வரியில்.

இந்த கேள்விக்கான பதிலை தேட மறுக்கின்றோமோ?

சற்றே வெளியில் நடந்தேன்.

ஒரு குருவி கூண்டு தென்பட்டது,
உள்ளே ஆறு குருவிகள்.
அதுவே அதன் உலகம்.
உணவு ஒன்றே அதன் கதி.
தன்னுடைய ஆசைகளுக்காக உணவை மட்டுமே வழங்கி அக்குருவிகளின் முழு சுதந்திரத்தை பறித்துக்கொண்டு, அவற்றை பார்த்து மகிழும் மனிதனின் சிறுமை, சிரிப்பை மட்டுமே வரவைத்தது.
கூண்டில் இருக்கும், இந்த குச்சிக்கும், அந்த குச்சிக்கும் தாவி கொண்டிருக்கும் அக்குருவிக்கு தெரியுமா, தன்னால் ஒரு பெரிய மரத்தின் உயரத்திற்கு பறக்க முடியும் என்று?
தன் ஆற்றலை உணரலாமல், உணர வாய்ப்பு இல்லாமல், அடைக்கப்பட்ட கூண்டிற்குள் வாழும் அக்குருவியும், 'ஏன் படைக்கப்பட்டோம்' என்ற வினாவிற்கு விடைதெரியாமல் சுற்றி கொண்டிருக்கும் நானும் ஒன்றன்றோ...
ஜன்னலின் வழி எட்டி பார்கையில்,
வண்டியில் இருந்தது ஓடுகளை இறக்கி கொண்டிருந்தார்கள்..


கேள்விகள்
துளைத்துக்கொண்டே தான் இருக்கின்றது
நம் ஒவ்வொருவரையும்
கண்டுகொள்ளாதது போல் நடிப்பது ஏனோ?

முயன்று,
முயன்று ,
விடை தெரியாத அயர்ச்சியில், தேட மறுகின்றோமோ?

Sunday, June 6, 2010

செடியும் குழந்தையும்..


கீழே வைக்க மனமில்லாமல்...

( சுற்றுச் சூழல் தினமான ஜூன் 5 அன்று, பெட்ரோல் பங்கில் தரப்பட மரக்கன்று. பரிகாரம் என்று நினைக்கிறேன்.... )

இலைகளை தொட்டதும், குழந்தையின் பாதங்களை தொட்டது போல் ஒரு உணர்வு.

ஒவ்வொரு கன்றையும், செடியையும் பார்க்கும் போது அப்படியே வீட்டுக்கு தூக்கிட்டு போய்விடலாம் என்று தோன்றும்.

ஒரு செடியை வாங்கினாலோ, பதியனிட்டது அழகாய் வந்து விட்டாலோ, ஒடித்து நடப்பட்ட கிளையில் தளிர் வந்தாலோ, ஒரு சந்தோஷம் வரும் பாருங்க, அதற்கு இணை ஏதும் இல்லை.

இந்த சந்தோஷத்தை அனுபவிக்கவாயினும் ஒரு செடியை நட்டு தண்ணீர் ஊற்றி தான் பாருங்களேன்.