Tuesday, March 30, 2010

பிரியும், என்றும் பிரியாத நட்புகள்...


பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடித்திரிந்த பறவைகளே,
பழகி களித்த தோழர்களே,
பறந்து செல்கின்றோம்,
நாம்,
பறந்து செல்கின்றோம்.....

..........................................................................................................

யாருமே தெரியாத இடத்தில் விட்டுட்டு போறிங்களே,
என்று
அன்று பனித்த என் கண்கள்,
இன்றும் பனிக்கிறது
எல்லாரையும் நல்லா தெரிஞ்சிகிட்டு
புரிஞ்சிக்கிட்டு விட்டுட்டு போக போறேனே என்று...

ரொம்ப அழ வெச்சிடாதிங்க மக்கா...

.........................................................................................................

ஒரே மரத்தில் இளைப்பாறிய நாங்கள்,
இன்று
உலகத்தின் வெவ்வேறு திசைகளில்,
தனித்தனியே பறக்க இருக்கிறோம்.


எங்களின் பயணம் இனிதே அமைய ,
நீங்களும் வாழ்த்தலாமே...
:-)

Tuesday, March 23, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்...

தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் அகல்விளக்கு ஜெய்க்கு நன்றி...
தொடர்பதிவின் நிபந்தனைகள்

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக
இருக்கும்
,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

.....................................................................................................................................................
ஜெய் சொன்ன எல்லாரையும் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், அவர்களைத்தவிர
......................................................................................................................................................

1. N.K டீச்சர்

நா.கலாவல்லி, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியை.ஒல்லியான உருவம், எப்போதும் அபூர்வா புடவை, எல்லாரையும் நல்லா மிரட்டுவாங்க, இவ்வளவுதான் தெரியும் இவர்களை பற்றி ஒன்பதாம் வகுப்பு வரை.

நான் பத்தாம் வகுப்பு ஆரம்பிச்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன், அப்பாடா... இவங்க எங்க கிளாஸ் டீச்சர் இல்லை, வெறும் கணிதத்திற்கு மட்டும் தான், தப்பிச்சோம் என்று.
அவங்க வகுப்புக்கு வந்து பாடம் எடுக்க ஆரம்பிச்ச அப்புறம் தான் தெரிஞ்சுது, அவங்களை பற்றி.
வெறும் கணிதத்திற்கு மட்டும் ஆசிரியை அல்ல, என் வாழ்க்கைக்கே ஆசிரியை என்று.
நம்பிக்கையின் உற்று அவங்க.
என் கையெழுத்தை மாற்றி என் தலையெழுத்தையே மாற்றியவர்கள். எல்லாத்தையும் 90 டிகிரில எழுத்து கனி, எந்த மொழியாக இருந்தாலும் சரி என்றார்கள், அப்ப மாத்தினது தான்.

கிளாஸ்ல, வில்மா ருடோல்ப் கதைல இருந்து மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடுறது வரைக்கும் எல்லாத்தையும் பேசுவாங்க.
எண்கணிதம் முதல் எய்ட்ஸ் வரைக்கும், வகுப்பில் சர்வ சாதாரணமா பேசுவாங்க.
எல்லாமே பிளான் பண்ணிதான் பண்ணுவாங்க.
பசங்களை மிரட்டி அழவெச்சிட்டு, சாக்லேட் தந்து காமெடி பண்ணுவாங்க.

இவளின் முந்தானை பிடித்து சுற்றி திரிந்த காலங்கள் என்றும் மறக்கவே முடியாதவை.

வீட்டில் உள்ள பல்வேறு காரணத்தினால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்த என்னை, படிப்பை தவிர வேறு எந்த விஷயத்திற்கும் கவனம் செலுத்த முடியாமல் மாற்றினாங்க.
கணித மன்றம் பற்றியும், ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் நாங்க வாங்கின பரிசும் பின்னாடி இருந்து வழிநடத்தின N.K டீச்சர் பற்றியும், அவங்களுடைய தன்னம்பிக்கை பற்றியும் ஒரு தனி பதிவே போடலாம். என்னோட சேர்த்து பொது தேர்வில் கணிதத்தில் ஏழுபேர் முழு மதிப்பெண், ஒரு கிராமத்துல இருக்கின்ற அரசு பள்ளிகூடத்தில் இதுவும் ஒரு சாதனையே. இன்னும் சொல்லிகிட்டே இருக்கலாம் எங்க டீச்சர் பற்றி.

இப்பவும் " மண்ட மேலையே தட்டு " என்று அவங்க அடிக்கடி சொல்லும் வாக்கியம் காதில் கேட்டுகொண்டே இருக்கும். :-)

2. லத்திக்கா சரண்...இவங்கள நேரில் பார்த்ததில் இருந்து ரொம்ப பிடிச்சி போச்சு, என்ன.... ஒரு கம்பீரம்!!!
இவங்களுடைய நடையும், இன்னொரு போலீஸ் அதிகாரி கிட்ட பேசும் விதமும், ரொம்ப பிடிக்கும்.
அப்புறம் அவங்களுடைய ஹேர் கட்டிங்.


3. அன்னை தெரசா

தன்னிகரற்ற தொண்டு. ( வேற ஒன்னும் சொல்ல வேண்டாம் என்று நினைக்கின்றேன் )

4. வில்மா ருடால்ப்

நம்பிக்கையின் சிகரம்.
5. அருந்ததி ராய்
எழுத்திற்கு...
எழுத்திற்கு என்று மட்டும் சொல்ல முடியாது...
ஏதோ ஒன்னு என்னை ஈர்க்கும்...6. ஸ்ரீ சரவணா ஸ்டோர்ஸ் ( காஞ்சிபுரம் )- கடையோட முதலாளி அம்மா

இவங்க பெயர் தெரியாது, ஆனால் அப்படி ஒரு அடக்கம், பொறுமை, பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவங்க பில் போடும் அழகையும், வேலை ஆட்களை வேலைவாங்கும் திறமையையும், வாடிக்கையாளர்களிடம் பேசும் கணிவையும்.
மேலாண்மைத் திறமைகளுக்கு இவங்க.

7. கல்பனா சாவ்லா

வானத்தில் பறக்கணும்னு ஆசை இருக்கின்ற பொண்ணுக்கு, அப்படி பறப்பவர்களையும், விண்வெளிக்கு போகின்றவர்களையும் எவ்ளோ....... பிடிக்கும்.
எல்லாரையும் பிடிக்கும்னாலும் கல்பனா சாவ்லா தான் ரொம்ப பிடிக்கும்........
( நாசா என்ற பேட்சுக்கு பதில் இஸ்ரோ என்று இருந்து இருக்கலாம்...
எதை சொல்வது, யாரை சொல்வது? )

8. பார்கா தத் ( Barkha Dutt )

இவங்க NDTV குரூப் எடிட்டர், இவங்களையும் ரொம்ப பிடிக்கும்.

26/11 நிகழ்வின்போது இவர்களை உற்று நோக்கும் வாய்ப்பு கிடைத்தது ( அட, டிவில தாங்க ), அப்பொழுதில் இருந்து இவங்களை பிடிக்கும்.

இவங்க நேர்முகம் காணும் விதம் அழகு.

எனக்கு பத்திரிக்கை துறைக்கு போகணும்னு வேற ஒரு ஆசை. இவங்க எல்லாரையும் பேட்டி எடுக்கும் போதும், கவரேஜ் நியூஸ் தரும்போதும் பொறாமையா இருக்கும்.

சமீபத்தில் தான் தெரியும் இவங்களுக்கு 2004 ல் பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது என்று.9. மேரி கியூரி


எனக்கு வேதியியல் ( Chemistry ) ரொம்ப ரொம்ப பிடிக்கும், ரேடியம், போலோனியும் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து, ஐசொடோப்கள் பற்றிய இவருடைய ஆராய்ச்சி மெய்சிலிர்க்கவைக்கும்.

இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.
பாரிஸ் பல்கலைகழகத்தின் முதல் பெண் விரிவுரையாளர், என பல பெருமைகள் இவரைச்சாரும்.

இவை அனைத்தையும் விட, ரேடியத்தின் அதிக கதிரியக்க தன்மையே அவரின் உயிரிழப்பிற்கும் காரணம் என்னும் செய்தியே, அவரை என் உள்ளத்தில் உட்கார வைத்துவிட்டது.
பதினோராம் வகுப்பில் இருந்து இவங்களை ரொம்ப பிடிச்சி போச்சு.


10 . ராஜி
முழு பெயர் இராஜேஸ்வரி.
எல்லாத்தையுமே வித்தியாசமா செய்யணும்னு யோசிகின்ற பொண்ணு இவ.
என்னோட தோழி.
இவ வித்தியாசமா யோசிக்கிறது மட்டும் இல்லாம, என்னையும் யோசிக்க வைப்பா.
பல்கலைவித்தகி.
நான் வாசித்த முதல் கவிதை அவள் தான்.
எங்கள் பள்ளியின் பூபந்து நடு ஆட்டக்காரி ( அதாங்க Ball Badminton center player ). வெறித்தனமா ஆடுவா.
பழசை எப்பவுமே மறக்க மாட்டா.
எவ்ளோ பெரிய கஷ்டமா இருந்தாலும், ஒரு புன்னகையோடு எதிர் கொள்ளும், அவளிடம் இருந்து நான் கற்றது, கற்க வேண்டியது ஏராளம்... ஏராளம்....

......................................................................................................................................................

ராஜி கிட்ட மட்டும் இருந்து இல்லை, மேலே சொன்ன மீதி ஒன்பது பேரிடம் இருந்தும் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
இன்னும் நிறைய பேர் இருக்காங்க அரசியல், வலைப்பூ பதிவர்கள், பொது வாழ்க்கை, மருத்துவம், சமையல் என பல பிரிவுகளில் பல பேரை பிடிக்கும். விதி முறையை மீற கூடாது இல்லையா...
நிறுத்திக்குவோம்... :-)

Sunday, March 21, 2010

முதல் ஓவியம்

இது என் முதல் ஓவியம்,
இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வரைந்து இருப்பேன்,
எங்கு மட்கியதோ அந்த காகிதம்...
ஆனால் ஓவியம் மட்டும்,
நினைவுகளின் அறைகளில் நீங்காமல் உள்ளது...

ஒரு வீடு,
திறந்த கதவு,
வீட்டின் பக்கத்தில் ஒற்றை தென்னை மரம்,
வீட்டிற்கு போக ஒரு பாதை,
மேலே சூரியன்,
கொஞ்சம் மேகங்கள்,
இரண்டே இரண்டு பறவைகள்...

இது தான் அடிப்படை,
எனக்கு மட்டும் அல்ல,
பல பேரின் முதல் ஓவியம் இது தான்.

வகுப்புகள் மேலே போக போக,
ஒரு சில பாகங்கள் கூடின,

வீட்டின் முன் ஒரு கோலம்,
பக்கத்தில் ஒரு வைக்கோற்போர்,
மாட்டு வண்டி,
சைக்கிளில் போகும் சிறுவனும்,
அங்கம் ஆகினர்...

ஆறாம் வகுப்பில்,
இந்த ஓவியம் ஒரு வட்ட வடிவம் ஆனது,
வீடு மறைந்து பூங்காவானது,
பாதை மறைந்து ஓடை ஆனது,
மாட்டு வண்டிக்காரர், படகோட்டியானார்...

மேல்நிலைவகுப்புகளில்,
மகாபலிபுரம்,
தாஜ்மஹால்,
சுற்றுசூழல்,
சுனாமி,
ஒற்றுமை,
உலக அமைதி,
புவி வெப்பமயமாதல்,
புதுபிக்கத்தக்க எரிசக்தி,
என கொடுக்கப்பட தலைப்புகளில் வடிவம் மாறியது
என் முதல் ஓவியம்.

இதுவரை எத்தனை ஓவியங்கள் வரைந்து இருப்பேனோ தெரியவில்லை,
அனைத்திற்கும் தாய்,
இந்த முதல் ஓவியம் மட்டுமே...

ஏனோ, பக்கத்தில் கட்டிகொண்டிருக்கும்
இந்த வீட்டை பார்க்கையில்,
நினைவுகளின் கடைசி அறையில் இருக்கும்
என் முதல் ஓவியம்
மேல் அறைக்கு வந்துவிடும்.Wednesday, March 10, 2010

கண் முன்னே தவறு நடக்கும் போது...கண் முன்னே தவறு நடக்கும் போது
தட்டி கேட்காதவர்கள்
தவறு செய்பவனை விட
அதிகமாய் தவறுசெய்பவர்கள்...


இது ஒரு பெரிய (கதை, கதை அல்ல அன்றாடம் நான் சந்திக்கும்) நிஜம்...

முன்பே பெண்களுக்கு எதிராக பேருந்துகளில் நடக்கும் சில சம்பவங்களை இடுகையிட்டு இருந்தாலும், இதை பகிர்ந்தே ஆகவேண்டும் என்று என்னுள் தோன்றியது.


சென்ற வாரம்,
வழக்கம் போல சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். என் பக்கத்தில் ஒரு அம்மா, அந்த அம்மாவின் மகன் எங்களின் இருக்கைக்கு எதிரில், பின் புறத்தில் அமர்ந்து இருந்தான். அவனுக்கும் என்னுடைய வயதே இருக்கும்.
நான் இரண்டு மணிநேர பயணம் என்பதால் காதில் 'கருவியை' மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்தவண்ணம் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தேன்...

ஒரு பதினைந்து நிமிடம் கழிந்து இருக்கும், திடீரென எனக்கு பக்கத்தில் இருந்த அந்த அம்மா ஒரு reaction * விட்டாங்களே!!! பயந்துட்டேன். பெருங்கோபமாய் பின்னாடி திரும்பி, பின் இருக்கையில் இருந்த வயதுமுதிர்ந்த ஆளை பார்த்து செம திட்டு. என்ன நடந்து இருக்கும் என்று எங்கள் எல்லோராலும் யூகிக்க முடிந்தது.

வயதுமுதிர்ந்த ஆள் - - சுமார் ஒரு 70 வயது இருக்கும் அந்த ஆளுக்கு. தாத்தா என்று சொல்ல மனம் இல்லை எனக்கு. கருமையான நிறம், கண்ணை பார்த்தவுடன் சொல்லிவிடலாம், செம தண்ணி.

"பாடையில் போறமாதிரி இருக்க நீ போய்...
ச்சே... கொஞ்ச நேரத்துல உடம்பே வேடவேடத்துடுச்சி ,
என்ன பார்த்த உன் பொண்ணு மாதிரி இல்லையா?"
-- அந்த அம்மா

அந்த ஆள் எதையும் காதில் வாங்கிகொள்ளவே இல்லை, நடத்துனரிடம் புகார் செய்தாள் இவள். அவரும் கண்டுகொள்ளவே இல்லை. இதெல்லாம் சகஜம் என்பது போல் நடைபிணமாய் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

எனக்கு செம கடுப்பு, பின்னாடி திரும்பி அந்த ஆளை என் பங்கிற்கு திட்டிவிட்டு, முறைத்தேன். அப்போது கண்ணில் பட்டான் அந்த அம்மாவின் மகன். எனக்கே இவ்ளோ கோபம் வருது இவன் என்ன இப்படி உட்கார்ந்து கொண்டு இருக்கான்.
ச்சே... இப்படியும் ஒரு பிள்ளையா, அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மனதில் அனைவரையும் சபித்துக்கொண்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிறிது நேரத்தில் அந்த அம்மாவும் உறங்கிவிட்டார்கள்.

"ஓஓய், என்னடா..... " என்று பலத்த சத்தம் பின்னாடி திரும்பி பார்த்தேன். அந்த அம்மாவும் கண்விழித்துக் கொண்டு திரும்பி பார்த்தாள்.
அப்பா!! என்ன ஒரு நெருப்பு, அவன் கண்களில், அந்த அம்மாவின் மகன், அந்த குடிகாரனின் கையை தன் ஒரு கையால் பிடித்துகொண்டு, மறு கையினால் அவனை அடிக்கும் நிலையில் இருந்தான்.
அடிக்கமட்டும் தான் இல்லை.
"என்னடா நான் பார்க்கவில்லை என்று நினைச்சிகிட்டு இருக்கியா, அப்போதிலிருந்து உன்ன மட்டும் தான் இவ்வளவு நேரமாய் பார்த்துகொண்டு இருக்கின்றேன், எவ்ளோ நைசா கைய கொண்டுபோற நீ..." மீண்டும் அடிக்க முற்பட்டான்.
" அடிச்சிடுவியா நீ ?? " என்றான் அந்த ஆள்.
அதற்குள் பக்கத்தில் இருப்பவர்கள் இவனையெல்லாம் ஏம்பா அடிச்சிகிட்டு என்றார்கள்,
அந்த நெருப்பு அவன் கண்களில் இருந்து கொஞ்சம் கூட குறையவில்லை.
ஆம் அடிக்க கூடாது வேற ஏதாவது நல்லா ஞாபகத்துல இருகின்றமாதிரி செய்யணும்.

"அவனை வேற எங்கையாவது உடகார வையுங்களேன்." --இது நான்.

அவரவர் வாய்க்கு வந்தபடி திட்டி கொண்டு இருக்க, அந்த அம்மா மீண்டும் உரக்க சொன்னாள். "யோவ், மறுபடியுமா? ஏன்யா நீயெல்லாம் எதுக்கு..... நானாக இருக்கவே போச்சு, இதுவே இந்த பொண்ணு இங்க உட்கார்ந்து இருந்தா?? " என்றாள்.
நொடியும் இடைவெளி இல்லாமல் முன்னிருக்கையில் இருந்த அம்மா, உன்னமாதிரி பேசிக்கிட்டு இருக்க மாட்டா பளார்னு ஒன்னு விட்டு இருப்பா... என்றார்கள்.
( என்னசெய்து இருப்பேனோ தெரியவில்லை, கண்டிப்பாய் அடித்து இருப்பாய் என்றான் என் நண்பன். )

ஒருவழியாய் அந்த ஊமை நடத்துனர் அவனை கடைசி இருக்கைக்கு அழைப்பு விடுக்க அவன் சென்றுவிட்டான், நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாதவன் போல் முகத்தை வைத்துக்கொண்டு சென்றான்.

பாதிக்க படுபவர் தன் அன்னை என்பதால் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கலாம். இதே கோபம் எந்த ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டாலும் நமக்கு ஏற்படவேண்டும், அதை தட்டிகேட்க வேண்டும். தவறு நடப்பதை கண்முன்னே கண்டும், இதனை பார்த்தும் பார்க்காமல் இருப்பவர்கள் உண்மையில் நடைபிணங்களே...

கண் முன்னே தவறு நடக்கும் போது
தட்டி கேட்காதவர்கள்
தவறு செய்பவனை விட
அதிகமாய் தவறுசெய்பவர்கள்...


Tuesday, March 2, 2010

மரகதம் தந்த முத்து...


ச்சே...
எனக்கு ஏன் இது தோன்றவில்லை...

எப்போதும் நான் உபயோகப்படுத்தியதையே
அவளுக்கு தரும் எனக்கு,
நேற்று,
திருவிழா கடையில் இருந்து
புது வளையல்கள் வாங்கி வந்திருந்தாள்
எனக்காக...


நீ வெச்சிக்கோ மரகதம் என்றேன்..
எனக்கு எவ்வளவோ தந்து இருக்க,
மறுக்காமல் வாங்கிக்கோ என்றாள்...


குற்றஉணர்ச்சியுடன் பெற்றுக்கொண்டேன்
தினக்கூலி ரூ 50 என தெரிந்தும் ...

நான் கையில் போட்டுக்கொண்டதும்
அவள் முகத்தை பார்க்கணுமே,
இணையில்லா சந்தோசம்...
எனக்கும்...

முத்தை விட விலைமதிப்பற்றவை,
இவையும் ... இவளின் அன்பும்...

நானும் முடிவெடுத்துவிட்டேன்,
வேலைக்கு போய் என் உழைப்பில்
அவளுக்கு புதியதாய் ஏதாவது வாங்கித்தரனும் என்று...