Wednesday, November 25, 2009

கோவிலுக்கா?

பிள்ளையார் கோவிலை விட்டு நானும் என் தோழியும் வெளியில் வந்தோம், அடுத்து அன்னைமார் கோவிலுக்கு போவது வழக்கம், வழியில் ஒரு சினேகிதியை சந்திக்க நேர்ந்தது. அவள் சிநேகமாய் புன்னகைத்தாள்,
"எங்க கோவிலுக்கா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே, என்ன விசேஷம்??" என்றாள் அவள், பெருத்த வியப்புடன்.
பதிலை நான் தேடுகிறேன்...
.
.
.
என் முதல் பதில், நான் இந்து குடும்பத்தில் பிறந்ததால் என்பதாக தான் இருக்கும்.

என்னை பொறுத்தவரை கடவுள் என்பது ஏதோ ஒரு சக்தி அவ்வளவுதான். இது தான் கடவுள், இப்படி தான் இருப்பார், இப்படி தான் பூஜிக்க வேண்டும், என்பதில் துளியும் நம்பிக்கை இல்லை.

ஏன் விழுகிறோம், ஏன் எழுகிறோம் என்று தெரியாமல் விழுந்து கொண்டும், எழுந்து கொண்டும் இருக்கின்றோம். எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் சொல்லுவாங்க ஆனால் விளங்கவில்லை அவர்களின் விளக்கங்கள்.

மதம், பக்தி என்பதற்கு பொருள் தெரியவில்லை, உண்மை அதுதான். தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.
ஆகவே,
எனக்கு மாரியம்மனும், மாதாவும் ஒன்று தான். மனிதன் பெரும்பாலும் தன் வேண்டுதல்களை கொட்டும் ஒரு இடமாகத்தான் கோவிலையும், சர்ச்சையும், இன்ன பிறவற்றையும் எண்ணுகிறானோ? என்று ஒரு ஐயம் எனக்கு உண்டு. அதையும் மீறி அவற்றை ஒரு கலை நோக்கோடு பார்ப்பவர்களும் உண்டு.

எல்லா மதத்து நட்பும் எனக்கு கிடைத்தது. பள்ளியில் முஸ்லிம்கள் அதிகம், தற்போது படிப்பது கிருத்துவ சிறுபான்மை கல்லூரியில், என்னை போலவே என் தோழிகளுக்கும் பைபிளில் நிறைய சந்தேகங்கள், கேள்விகள் இருப்பது தெரிய வந்தது. பைபிளில் ஏன் கடவுள்(இயேசு) அப்படி செய்தார் என்று காரமாய் விவாதிப்பார்கள். திருபலிகளுக்கும் செல்வேன்(வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது).

ஒரு முறை அம்மாவுடன் church-ஐ கடக்க நேர்ந்தது. அவ்வளவு அழகாய் இயேசு நாதர் கைகளை விரித்து அழைத்து கொண்டிருந்தார். பார்த்ததும் பரவசத்தில் பிதா சுதனின் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென், என்று சொல்லிக்கொண்டே சிலுவை போட்டாச்சு. அம்மா "ஓய்" என்றார். அர்த்தம் நான் சொல்ல வேண்டியது இல்லை.

கேள்விகள் விளக்கங்கள் எல்லாம் இருக்கட்டும், எனக்கு பிடித்ததை செய்கிறேன். சண்டிகேஸ்வரரை தியானத்தில் இருந்து எழுப்புவது பிடிக்கும், செய்கிறேன்...
திருபலியில் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்வது பிடிக்கும், செய்கிறேன்...
பக்தி எல்லாம் இல்லை.

காலையில் தமிழ் கடவுளுக்கு 'good morning god' என்று அபத்தமாய் சொல்லுவேன். இதுவும் பிடிக்கும்.

எந்த மதத்து கோவிலாய் இருப்பினும் பொதுவாய் என் வேண்டுதல் குழந்தை பருவத்தில் சொல்லி கொடுத்தது தான்.
"சாமி... எல்லாரும் நல்ல இருக்கணும், நல்லபடியா படிக்கணும், அவங்களுக்கு உடம்பு சரியா போய்டணும், அது அப்படி நடக்கணும், இது இப்படி நடக்கணும்"

இதை இருந்த இடத்தில் இருந்தே கூட வேண்டலாம்...

" திருப்பதி போய் 2 நாள் கூண்டில் இருந்து, பின் பெருமாளை பார்த்ததும் கண் மூடி வேண்டும் நம் மக்கள் " என்று என் ஸ்ரீஜித் ஐயா சொல்லுவார்.

முன்பு ஒரு முறை கடவுள் பற்றிய விவாதத்தில் என் தோழன் பீட்டர் சொன்ன கருத்து இங்கே ஏற்றதாக இருக்கும்,

laplace wrote a book on how the planets worked
napolean asked him
smiling
"why is there no mention of god here?"
laplace replied
"I have no need for such a thing"

இந்த கருத்தில் உடன்பாடு இருக்கோ இல்லையோ , என் ஊர்க்காரர் சொன்ன கருத்தில் உடன்பாடு உண்டு

"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"

நாளும் இங்கு இறைவனை தரிசிப்போம், தரிசிக்க முயலுவோம்.

ஏன் இன்று கோவிலுக்கு வந்தேன்?


இரண்டாம் பதில், என் தோழிக்காக... அவள் தினமும் கோவிலுக்கு செல்வது வழக்கம். முன்பு ஒரு நாள் என் நண்பனின் பிறந்தநாள் ஆகையால்,
நானும் இன்று உங்களோடு கோவிலுக்கு வரேன், என்றேன் என் 75 வயது தோழியிடம். அவங்களோட புது பழக்கம் தொடங்கிய காலம், அது தான் முதல் முறை நான் அவங்களோட கோவிலுக்கு போறது.

நவகிரகம் சுத்தி முடித்ததும் பாட்டியோட முகத்தை பார்க்கவே முடியவில்லை, மயக்கம் வந்தது போல் காணப்பட்டார். 2 வாரம் பாட்டியை தனியா கோவிலுக்கு போக விட்டது தப்பு என்று தோன்றியது.

நாட்கள் நகர நகர, வழியில் தென்படும் இரட்டைவால் குருவிகள், அந்த திறந்தவெளி அன்னைமார் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் இரு அரசமரங்கள், வெப்ப மரம், வில்வமரம், அரசமர சுற்று சுவற்றில் உள்ள பாசிகள், கோவில் மணி, தினமும் படித்து கொண்டிருக்கும் ஒரு சிறுவன், சிவக்கும் வானம், மேகங்கள் எல்லாம் என் விருப்பமானவை ஆயின. தினமும் இவற்றை ரசிப்பது வாடிக்கை ஆகிவிட்டது.

என் 75 வயது பாட்டிக்கு எத்தனை வேண்டுதல்கள் இருக்குமோ தெரியாது. அவருடன் துணைக்காக நான், என்ற சாக்குடன் மேற்சொன்ன அனைதிற்க்காகவும் தினமும் கோவிலுக்கு வருகிறேன்.
பக்தி அல்ல...
.
.
.
அவள் சிநேகமாய் புன்னகைத்தாள், "எங்க கோவிலுக்கா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே, என்ன விசேஷம்??"என்றாள் அவள், பெருத்த வியப்புடன். சற்று நேர மௌனத்திற்கு பின்,
நானும் என் 75 வயது தோழியும் சேர்ந்தே பொய் சொன்னோம்,
"சும்மா தான் "...

Saturday, November 14, 2009

ஏன் பெண்ணாய் பிறந்தேன்?நகரவும் வழியில்லை புறநகர பேருந்துகளில்
நிற்பதில் நான் மட்டும் பெண்
உரசிக்கொண்டே இருக்கின்றான் ஒருவன்
பட்டாம்பூச்சி மீண்டும் புழுவானது
இன்னும் என்னால் நகர முடியாது என்கிறது கடைசி இருக்கை
திரும்பி பார்க்கவும் வழி இல்லை
பாவம் நிற்க இடம் இல்லை போலும், என்று நினைத்து கொண்டேன்
அவன் கீழே இறங்கியவுடன், நடத்துனர் கேவலமாக திட்டினார் அவனை
அப்போதுதான் உணர்ந்தேன் அந்த ஈன பிறவியை
"கன்னத்திலே ஒண்ணு விட கூடாதம்மா " - நடத்துனர்
என்ன செய்வேன் நான்
நடப்பது தவறு என்று கூட நினைக்காதவள்

எது எப்படி இருப்பினும் அவனை ஈர்த்தது என் வெற்று உடல்
எரித்துவிட்டேன் என் உடலை தீயில்
இறந்துவிட்டேன் சில நிமிடங்கள்
ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்ற கேள்வியுடன்,
என் பிணத்தின் முன் அழுதது வானம் வெளியில்...

எந்த நேரத்தில் சொன்னானோ தெரியவில்லை, பாரதி-
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா...

( சில நேரங்களில் பேருந்துகளில் பெண்கள், பிணங்களாய் பயணிப்பதை எடுத்துரைக்க )

Monday, November 9, 2009

நானும் தீபாவளியும்...

அன்பு நண்பன் அகல் விளக்கு அழைத்ததால் தொடர்கிறேன் இந்த தொடர் பதிவை...

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

கனிமொழி - கற்பது கணினி, இறுதி ஆண்டு பொறியியல் மாணவி... மனிதர்களையும் அவர்களின் அழகான நிலை மாறும் மனதையும் மிகவும் நேசிப்பவள். புரியாத புதிர்களுக்கு விடை தேடுவது பகுதி நேர வேலை.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

என் தோழி வசந்திக்கு ஏற்பட்ட தீக்காயங்கள்... பட்டாசுகளில் இருக்கும் மருந்துகளை தனியே எடுத்து அவள் கொளுத்தியதால் ஏற்பட்டது. அந்த விபத்து நடக்கும் போது நான் அருகில் இல்லை, ஆனால் அவள் கைகளை பார்த்ததும் அழுதுவிட்டேன். விளையாட்டு வினை ஆகிவிடும் என்பதை உணர்த்திய முதல் வாழ்க்கை பாடம், எனக்கு.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

காலையில் காஞ்சிபுரம், பின் மறுநாள் நோன்பிற்காக படப்பை ( பாட்டி வீடு )

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருப்பதால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை, காலை முதல் மாலை வரை எங்கள் தோட்டத்தில் ஒரே பட்டாசு சத்தம் தான்...

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்க‌ளா ?

தீபாவளிக்கு புத்தாடை இல்லை என்பது அப்பாவின் அன்பு சொல், நானும் வற்புறுத்த மாட்டேன்...

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

எதை சொல்வது எதை விடுவது, சிலதை அம்மா செய்தார்கள், சிலதை வாங்கினார்கள்... நோன்பு என்பதால் அதிரசம் தான் ஸ்பெஷல்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

மின்னஞ்சல், தொலைபேசி, நேரிலும் ...

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

அன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவன் சத்தியமாக மிகவும் பொறுமையானவன். நான் அந்த சாதி அல்ல... நிறைய உறவினர்கள் வீட்டுக்கு வருவாங்க அவங்க கூட இருந்தாலே நேரம் கழிவதே தெரியாது.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

என்னிடம் செலவு செய்ய மனம் உள்ளது ஆனால்,...
ஆகையால் என் பங்காக வரும் பட்டாசுகளை நான் வெளியில் மத்தாப்பு கொளுத்தும் போது அதை ஆசையை வேடிக்கை பார்க்கும் குழந்தைகளுக்கு தரும் பழக்கம் உண்டு. இந்த தீபாவளியிலும் அதை செய்ய வாயப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி...

10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

போதும் இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் ...
:-)

Sunday, November 1, 2009

உடன்பிறப்புகள்...


இந்த ஒரு வாரத்திற்குள் நான்கு முறை சென்னைக்கு செல்ல நேரிட்டது. பொதுவாகவே பயணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த ஒரு வார பயணத்தில் இருந்து நான் தெரிந்துகொண்டது இதுதான்...
தனி மனித ஒழுக்கம் குறைந்து கொண்டே வருகிறது...
சுற்று சுவர், நடை பாதை, நெடுஞ்சாலை ஓரங்கள், குப்பை மேடுகள், கால் வைக்கவே முடியாத இடங்கள், பொதுவாக - பொது இடங்கள்... எதையுமே விட்டு வைப்பதில்லை என் உடன்பிறப்புகள்... புரிந்திருக்கும் என் நெஞ்ச எரிமலையில் என்ன கொதிக்கிறது என்று...
ஆம், கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பது தான்... இதுவும் ஒழுக்கமற்ற செயலே...
ஆட்டோ ஓட்டுனர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள்... யாராக இருந்தாலும் சரி, ஒரு ஓரமாக திரும்பி கொள்வது, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 100 பேர் இருந்தாலும் சரி...
ஒரு துளி சிறுநீரில் எத்தனை லட்சம் பாக்டீரியா, வைரஸ் உள்ளது என்று தெரியுமா என் உடன் பிறப்புகளுக்கு???
இந்த ஒழுக்கமற்ற செயல்களை பார்க்கும் போதெல்லாம் ரத்தம் கொதிக்கும் எனக்கு... நானே என் மனதிடம் கேட்பேன் ஏன் கனி வர வர அம்பி மாதிரி யோசனை செய்கிறாய் என்று... என் மனம் பதில் உரைத்தது இல்லை.
ரொம்ப ஒழுங்கா இருக்கின்றவர்கள் கூட சுற்றுலா தளங்களுக்கு செல்லும் போது ஏனோ ஒழுக்கங்களை மறந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே இருக்கின்ற நோய்களுக்கு பஞ்சம் இல்லை...
யோசிப்போம்...
மாசுபடுதல் பற்றி நிறைய படிப்போம், பேசுவோம், ஆனால் அது யாரோ எவரோ செய்வது என்று ஒரு எண்ணம் என் உடன்பிறப்புகளுக்கு...
என்னை பொறுத்தவரை ஒரு பயண சீட்டை ரோட்டில் போடுவது கூட மண்ணை மாசு படுத்தும் செயல் தான், அந்த சீட்டு மட்கும் வரை...
plastics -அதை பற்றி தனி பதிவே போடலாம்...

கோயம்பேடில் இருந்து திருவான்மியூர் சென்ற பேருந்தில்,
ஜன்னல் ஓர இருக்கை... பயணத்தில் எதிர் படும் ஒவ்வொன்றையும் கவனிப்பேன்... அப்படி வேடிக்கை பார்க்கும் போது ஒரு இளைஞன், நல்ல ஆடை, leather shoes, bag, mobile with headset ( மன்னிக்கவும் ) , பேருந்து நிறுத்தம் ஆகவே
கொஞ்ச நேரம் பேருந்து நின்றது, அவன் ஒரு தெருவில் இருந்து வருகின்றான் எதிரில் ஒரு குப்பைமேடு சாதரணமாக எச்சில் உமிழ்கிறான் இந்த உடன் பிறப்பு,
அந்த குப்பைகளை அல்லபோவதும் என் உடன்பிறப்புதான்...
யோசிப்போம்...

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

இதையும் யோசிப்போம்...