"எங்க கோவிலுக்கா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே, என்ன விசேஷம்??" என்றாள் அவள், பெருத்த வியப்புடன்.
பதிலை நான் தேடுகிறேன்...
.
.
.
என் முதல் பதில், நான் இந்து குடும்பத்தில் பிறந்ததால் என்பதாக தான் இருக்கும்.
என்னை பொறுத்தவரை கடவுள் என்பது ஏதோ ஒரு சக்தி அவ்வளவுதான். இது தான் கடவுள், இப்படி தான் இருப்பார், இப்படி தான் பூஜிக்க வேண்டும், என்பதில் துளியும் நம்பிக்கை இல்லை.
ஏன் விழுகிறோம், ஏன் எழுகிறோம் என்று தெரியாமல் விழுந்து கொண்டும், எழுந்து கொண்டும் இருக்கின்றோம். எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் சொல்லுவாங்க ஆனால் விளங்கவில்லை அவர்களின் விளக்கங்கள்.
மதம், பக்தி என்பதற்கு பொருள் தெரியவில்லை, உண்மை அதுதான். தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.
ஆகவே,
எனக்கு மாரியம்மனும், மாதாவும் ஒன்று தான். மனிதன் பெரும்பாலும் தன் வேண்டுதல்களை கொட்டும் ஒரு இடமாகத்தான் கோவிலையும், சர்ச்சையும், இன்ன பிறவற்றையும் எண்ணுகிறானோ? என்று ஒரு ஐயம் எனக்கு உண்டு. அதையும் மீறி அவற்றை ஒரு கலை நோக்கோடு பார்ப்பவர்களும் உண்டு.
எல்லா மதத்து நட்பும் எனக்கு கிடைத்தது. பள்ளியில் முஸ்லிம்கள் அதிகம், தற்போது படிப்பது கிருத்துவ சிறுபான்மை கல்லூரியில், என்னை போலவே என் தோழிகளுக்கும் பைபிளில் நிறைய சந்தேகங்கள், கேள்விகள் இருப்பது தெரிய வந்தது. பைபிளில் ஏன் கடவுள்(இயேசு) அப்படி செய்தார் என்று காரமாய் விவாதிப்பார்கள். திருபலிகளுக்கும் செல்வேன்(வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது).
ஒரு முறை அம்மாவுடன் church-ஐ கடக்க நேர்ந்தது. அவ்வளவு அழகாய் இயேசு நாதர் கைகளை விரித்து அழைத்து கொண்டிருந்தார். பார்த்ததும் பரவசத்தில் பிதா சுதனின் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென், என்று சொல்லிக்கொண்டே சிலுவை போட்டாச்சு. அம்மா "ஓய்" என்றார். அர்த்தம் நான் சொல்ல வேண்டியது இல்லை.
கேள்விகள் விளக்கங்கள் எல்லாம் இருக்கட்டும், எனக்கு பிடித்ததை செய்கிறேன். சண்டிகேஸ்வரரை தியானத்தில் இருந்து எழுப்புவது பிடிக்கும், செய்கிறேன்...
திருபலியில் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்வது பிடிக்கும், செய்கிறேன்...
பக்தி எல்லாம் இல்லை.
காலையில் தமிழ் கடவுளுக்கு 'good morning god' என்று அபத்தமாய் சொல்லுவேன். இதுவும் பிடிக்கும்.
எந்த மதத்து கோவிலாய் இருப்பினும் பொதுவாய் என் வேண்டுதல் குழந்தை பருவத்தில் சொல்லி கொடுத்தது தான்.
"சாமி... எல்லாரும் நல்ல இருக்கணும், நல்லபடியா படிக்கணும், அவங்களுக்கு உடம்பு சரியா போய்டணும், அது அப்படி நடக்கணும், இது இப்படி நடக்கணும்"
இதை இருந்த இடத்தில் இருந்தே கூட வேண்டலாம்...
" திருப்பதி போய் 2 நாள் கூண்டில் இருந்து, பின் பெருமாளை பார்த்ததும் கண் மூடி வேண்டும் நம் மக்கள் " என்று என் ஸ்ரீஜித் ஐயா சொல்லுவார்.
முன்பு ஒரு முறை கடவுள் பற்றிய விவாதத்தில் என் தோழன் பீட்டர் சொன்ன கருத்து இங்கே ஏற்றதாக இருக்கும்,
laplace wrote a book on how the planets worked
napolean asked him
smiling
"why is there no mention of god here?"
laplace replied
"I have no need for such a thing"இந்த கருத்தில் உடன்பாடு இருக்கோ இல்லையோ , என் ஊர்க்காரர் சொன்ன கருத்தில் உடன்பாடு உண்டு
"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"
நாளும் இங்கு இறைவனை தரிசிப்போம், தரிசிக்க முயலுவோம்.
ஏன் இன்று கோவிலுக்கு வந்தேன்?
இரண்டாம் பதில், என் தோழிக்காக... அவள் தினமும் கோவிலுக்கு செல்வது வழக்கம். முன்பு ஒரு நாள் என் நண்பனின் பிறந்தநாள் ஆகையால்,
நானும் இன்று உங்களோடு கோவிலுக்கு வரேன், என்றேன் என் 75 வயது தோழியிடம். அவங்களோட புது பழக்கம் தொடங்கிய காலம், அது தான் முதல் முறை நான் அவங்களோட கோவிலுக்கு போறது.
நவகிரகம் சுத்தி முடித்ததும் பாட்டியோட முகத்தை பார்க்கவே முடியவில்லை, மயக்கம் வந்தது போல் காணப்பட்டார். 2 வாரம் பாட்டியை தனியா கோவிலுக்கு போக விட்டது தப்பு என்று தோன்றியது.
நாட்கள் நகர நகர, வழியில் தென்படும் இரட்டைவால் குருவிகள், அந்த திறந்தவெளி அன்னைமார் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் இரு அரசமரங்கள், வெப்ப மரம், வில்வமரம், அரசமர சுற்று சுவற்றில் உள்ள பாசிகள், கோவில் மணி, தினமும் படித்து கொண்டிருக்கும் ஒரு சிறுவன், சிவக்கும் வானம், மேகங்கள் எல்லாம் என் விருப்பமானவை ஆயின. தினமும் இவற்றை ரசிப்பது வாடிக்கை ஆகிவிட்டது.
என் 75 வயது பாட்டிக்கு எத்தனை வேண்டுதல்கள் இருக்குமோ தெரியாது. அவருடன் துணைக்காக நான், என்ற சாக்குடன் மேற்சொன்ன அனைதிற்க்காகவும் தினமும் கோவிலுக்கு வருகிறேன்.
பக்தி அல்ல...
.
.
.
அவள் சிநேகமாய் புன்னகைத்தாள், "எங்க கோவிலுக்கா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே, என்ன விசேஷம்??"என்றாள் அவள், பெருத்த வியப்புடன். சற்று நேர மௌனத்திற்கு பின்,
நானும் என் 75 வயது தோழியும் சேர்ந்தே பொய் சொன்னோம்,
"சும்மா தான் "...
நல்லா இருக்கு? சரி விவாதத்தை தொடங்கலாமா? :-)
ReplyDeleteஎண்ணற்றோரின் மனநிலையை எளிதாய் சொல்லிவிட்டீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி முரளி,
ReplyDeleteவிவாததிற்கு நான் தயார் நண்பா...
எப்பொழுது ஆரம்பிக்கலாம்?
:-)
நன்றி ஜெய், நீங்க இரண்டு பேரும் தரும் உற்சாகம் தான், நான் எழுதுகிறேன்.
ReplyDelete”இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் ஆனந்தமும் சேர்ந்ததுதான் கடவுள்”
ReplyDeleteஇதுவும் சரி தான் வண்ணத்துப்பூச்சியாரே.
ReplyDeleteநன்றி தங்களின் வருகைக்கு.