
மாலை 5:00 மணி வழக்கமாய் ஏறும் அதே பேருந்து. எப்போதும் போல கூட்டம், படி வரைக்கும். ஒரு வழியாய் ஏறி பேருந்தின் நடு பகுதியை அடைந்தேன்.
ஆறு மாததிற்கு முன்பு வரை நான் அந்த பேருந்திற்கு புதியவள்.
இப்போது வழக்கமாய் வரும் அனைத்து பயணிகளையும் ஓர் அளவிற்கு தெரியும். யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசினது இல்லை.
ஆனாலும் ஒரு சிலரை பிடிக்கும், ஏனோ ஒரு சிலரை பிடிக்காது.
இன்று என் முன் எனக்கு பிடித்த ஒரு சிறுமி. தோராயமாக ஆறாவது அல்லது ஏழாம் வகுப்பு படித்துகொண்டு இருப்பாள். அவளது பள்ளி சீருடை அவள் ஒரு மெட்ரிகுலேஷேன் மாணவி என்பதை அடையாளப்படுத்தும்.
எப்போதும் அவள் தோழி ஒருத்தியுடனே பேசிக்கொண்டே வருவாள். இந்த நாள் போல் மிக நெருக்கமாய் நான் அவளுடன் பயணித்தது இல்லை.
அவர்கள் பேசிகொண்டது எனக்கும் கேட்டது. ஒரு கட்டத்தில் "ஹே ஹேமா சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் என்ன வித்தியாசம்? " என்றாள் என்னவள் .
"எனக்கும் அதே டவுட் தான் டி" என்றாள் ஹேமா.
சரி அந்த அக்கா கிட்ட கேட்போம் என்று அவர்களுக்கு முன் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்டார்கள். ( நான் இருவருக்கும் பின்னால் இருந்தேன் )
"தெரியாதே மா" இது அந்த அக்காவின் பதில்.
எனக்கு ஒரே ஆச்சரியம் இதே கேள்வி எனக்கும் சிறு வயதில் ஏற்பட்டது. நான் யாரிடம் கேட்டு விடைபெற்றேன் என்று நினைவு இல்லை. ஆனால் தற்போது எனக்கு விடை தெரியும்.
பொதுவாக நானாக போய் பதில் சொல்லும் பழக்கம் இல்லை.
அமைதியாகவே இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின் ஏதோ ஒன்று உள்ளுர சொல்லியது, நீ பண்றது உனக்கே நல்லா இருக்கா கனி, போய் சொல்லி தா என்றது.
ஹாய் என்றேன், இருவரும் பின்னால் திரும்பினார்கள், சுதந்திர தினம் என்றாள் என துவங்கினேன் அதற்குள் என்னவளின் முகம் பிரகாசித்தது, "உங்களுக்கு பதில் தெரியுமாக்கா" என்றாள். தெரிஞ்சதை சொல்றேன் என்றேன். மீண்டும் அவள் " சுதந்திர தினம், என்றாள் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்ற தினம், ஆனால் குடியரசு தினம்னா???" என்றாள்.
சுதந்திரம் பெற்றதும் நாம ஆங்கிலேயர்களின் சட்டத்தை தான் பினபற்றினோம். நமக்கே நமக்குன்னு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் தலைமைல ஒரு குழு, உருவாக்கினாங்க, அந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஜனவரி 26 - 1949 ல இருந்து பின்பற்றுகின்றோம். அந்த நாளுக்கு பேரு தான் குடியரசு தினம், என்றேன்.
குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியுமா என்ற தயக்கத்துடனே சொன்னேன். ஆனால் அவங்க நல்லா புரிஞ்சிகிட்டாங்க. பின் மக்களாட்சி பற்றியும் பேசினோம்.
இறுதியில் 'நன்றி' வேறு. "இந்த கேள்வி உங்ககிட்ட இருந்து வந்ததே எனக்கு எவ்ளோ பெரிய சந்தோசம் தெரியுமா" என்றேன்.
குடிமையியல் என்று சமூகவியலில் ஒரு பிரிவு உண்டு, அங்கே தெளிவாக இதெல்லாம் சொல்லி இருந்தா பசங்க ஏன் இத்தனை கேள்விகளுடன் இருக்காங்க??
பாட புத்தகத்தில் சரியாய் தரவில்லையா ? இல்லை டீச்சர் சரியாய் புரியரற மாதிரி சொல்லி தரவில்லையா ?
கற்றுக்கொள்ள ஆட்கள் இருகின்றார்கள், சொல்லி தர??
நாம் நம்மால் முடிந்தவரை சொல்லிதருவோம்...