கண் முன்னே தவறு நடக்கும் போது
தட்டி கேட்காதவர்கள்
தவறு செய்பவனை விட
அதிகமாய் தவறுசெய்பவர்கள்...இது ஒரு பெரிய (கதை, கதை அல்ல அன்றாடம் நான் சந்திக்கும்) நிஜம்...
முன்பே பெண்களுக்கு எதிராக பேருந்துகளில் நடக்கும் சில சம்பவங்களை இடுகையிட்டு இருந்தாலும், இதை பகிர்ந்தே ஆகவேண்டும் என்று என்னுள் தோன்றியது.
சென்ற வாரம்,
வழக்கம் போல சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். என் பக்கத்தில் ஒரு அம்மா, அந்த அம்மாவின் மகன் எங்களின் இருக்கைக்கு எதிரில், பின் புறத்தில் அமர்ந்து இருந்தான். அவனுக்கும் என்னுடைய வயதே இருக்கும்.
நான் இரண்டு மணிநேர பயணம் என்பதால் காதில் 'கருவியை' மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்தவண்ணம் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தேன்...
ஒரு பதினைந்து நிமிடம் கழிந்து இருக்கும், திடீரென எனக்கு பக்கத்தில் இருந்த அந்த அம்மா ஒரு reaction * விட்டாங்களே!!! பயந்துட்டேன். பெருங்கோபமாய் பின்னாடி திரும்பி, பின் இருக்கையில் இருந்த வயதுமுதிர்ந்த ஆளை பார்த்து செம திட்டு. என்ன நடந்து இருக்கும் என்று எங்கள் எல்லோராலும் யூகிக்க முடிந்தது.
வயதுமுதிர்ந்த ஆள் - - சுமார் ஒரு 70 வயது இருக்கும் அந்த ஆளுக்கு. தாத்தா என்று சொல்ல மனம் இல்லை எனக்கு. கருமையான நிறம், கண்ணை பார்த்தவுடன் சொல்லிவிடலாம், செம தண்ணி.
"பாடையில் போறமாதிரி இருக்க நீ போய்...
ச்சே... கொஞ்ச நேரத்துல உடம்பே வேடவேடத்துடுச்சி ,
என்ன பார்த்த உன் பொண்ணு மாதிரி இல்லையா?"
-- அந்த அம்மா
அந்த ஆள் எதையும் காதில் வாங்கிகொள்ளவே இல்லை, நடத்துனரிடம் புகார் செய்தாள் இவள். அவரும் கண்டுகொள்ளவே இல்லை. இதெல்லாம் சகஜம் என்பது போல் நடைபிணமாய் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.
எனக்கு செம கடுப்பு, பின்னாடி திரும்பி அந்த ஆளை என் பங்கிற்கு திட்டிவிட்டு, முறைத்தேன். அப்போது கண்ணில் பட்டான் அந்த அம்மாவின் மகன். எனக்கே இவ்ளோ கோபம் வருது இவன் என்ன இப்படி உட்கார்ந்து கொண்டு இருக்கான்.
ச்சே... இப்படியும் ஒரு பிள்ளையா, அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மனதில் அனைவரையும் சபித்துக்கொண்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிறிது நேரத்தில் அந்த அம்மாவும் உறங்கிவிட்டார்கள்.
"ஓஓய், என்னடா..... " என்று பலத்த சத்தம் பின்னாடி திரும்பி பார்த்தேன். அந்த அம்மாவும் கண்விழித்துக் கொண்டு திரும்பி பார்த்தாள்.
அப்பா!! என்ன ஒரு நெருப்பு, அவன் கண்களில், அந்த அம்மாவின் மகன், அந்த குடிகாரனின் கையை தன் ஒரு கையால் பிடித்துகொண்டு, மறு கையினால் அவனை அடிக்கும் நிலையில் இருந்தான்.
அடிக்கமட்டும் தான் இல்லை.
"என்னடா நான் பார்க்கவில்லை என்று நினைச்சிகிட்டு இருக்கியா, அப்போதிலிருந்து உன்ன மட்டும் தான் இவ்வளவு நேரமாய் பார்த்துகொண்டு இருக்கின்றேன், எவ்ளோ நைசா கைய கொண்டுபோற நீ..." மீண்டும் அடிக்க முற்பட்டான்.
" அடிச்சிடுவியா நீ ?? " என்றான் அந்த ஆள்.
அதற்குள் பக்கத்தில் இருப்பவர்கள் இவனையெல்லாம் ஏம்பா அடிச்சிகிட்டு என்றார்கள்,
அந்த நெருப்பு அவன் கண்களில் இருந்து கொஞ்சம் கூட குறையவில்லை.
ஆம் அடிக்க கூடாது வேற ஏதாவது நல்லா ஞாபகத்துல இருகின்றமாதிரி செய்யணும்.
"அவனை வேற எங்கையாவது உடகார வையுங்களேன்." --இது நான்.
அவரவர் வாய்க்கு வந்தபடி திட்டி கொண்டு இருக்க, அந்த அம்மா மீண்டும் உரக்க சொன்னாள். "யோவ், மறுபடியுமா? ஏன்யா நீயெல்லாம் எதுக்கு..... நானாக இருக்கவே போச்சு, இதுவே இந்த பொண்ணு இங்க உட்கார்ந்து இருந்தா?? " என்றாள்.
நொடியும் இடைவெளி இல்லாமல் முன்னிருக்கையில் இருந்த அம்மா, உன்னமாதிரி பேசிக்கிட்டு இருக்க மாட்டா பளார்னு ஒன்னு விட்டு இருப்பா... என்றார்கள்.
( என்னசெய்து இருப்பேனோ தெரியவில்லை, கண்டிப்பாய் அடித்து இருப்பாய் என்றான் என் நண்பன். )
ஒருவழியாய் அந்த ஊமை நடத்துனர் அவனை கடைசி இருக்கைக்கு அழைப்பு விடுக்க அவன் சென்றுவிட்டான், நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாதவன் போல் முகத்தை வைத்துக்கொண்டு சென்றான்.
பாதிக்க படுபவர் தன் அன்னை என்பதால் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கலாம். இதே கோபம் எந்த ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டாலும் நமக்கு ஏற்படவேண்டும், அதை தட்டிகேட்க வேண்டும். தவறு நடப்பதை கண்முன்னே கண்டும், இதனை பார்த்தும் பார்க்காமல் இருப்பவர்கள் உண்மையில் நடைபிணங்களே...
கண் முன்னே தவறு நடக்கும் போது
தட்டி கேட்காதவர்கள்
தவறு செய்பவனை விட
அதிகமாய் தவறுசெய்பவர்கள்...