Thursday, April 15, 2010

கைவிடப்பட்ட கைத்தறிகள்


திடீரென்று என்ன... கைத்தறி பற்றி எல்லாம்...??

நெசவு குடும்பத்தில் பிறந்த நான் பேசாமல் யார் பேசுவது....

ஆம், அம்மா வீட்டில் பட்டு நெசவு, அப்பா வீட்டில் லுங்கி நெசவு.

பட்டு நெசவை நான் பிறப்பதற்கு முன்பே கைவிட்டுட்டாங்க. நான் வளர்ந்தது எல்லாம் லுங்கி நெய்யும் சப்தத்துடன் தான்.

ஓரளவிற்கு நல்ல வருமானத்தை தந்த கைத்தறிகளை கைவிட முக்கிய காரணம், விசைத்தறிகளின் வரவு. ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று, விசைத்தறிகளின் மூலம் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி செய்ய முடியும். ஆகவே அதன் ஆதிக்கம் கைத்தறி நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைக்க விடாமல் செய்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் நெசவாளர்கள் மாற்று தொழிலை தேடினர். ஒரு காலத்தில் அதாவது நான் ஆறாவது படிக்கும் போது, காலையில் சைக்கிள் ஓடிக்கொண்டு எங்கள் தெருவினை எளிதாக கடந்து விட முடியாது. தெருவின் இரு புறங்களிலும் பாவு போடப்பட்டு இருக்கும்.
ஆனால் இன்று, கடப்பாரையின் தடம் மட்டுமே எஞ்சியுள்ளது.

அதிஷ்டவசமாய் எங்கள் பகுதி ஸ்ரீபெருமந்தூர் மற்றும் ஓரகடம் SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu ) - இதற்கு பக்கமாய் இருக்கவே, வேலைவாய்பிற்கு குறைவில்லை.

கைத்தறி இருந்தவரை மக்கள் ஒருவருக்கொருவர் தோழமையாய் இருந்ததாய் எனக்கு ஒரு உணர்வு. அப்போது ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்ததால் அப்படி தோன்றியதோ தெரியவில்லை. ஆலைக்காரம்மா, பாவு தோய்த்து தருபவர், நூல் இழைபவர்கள், வீட்டில் தறி நெய்பவர்கள், பாவு போடுபவர்கள், என பல பேருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இன்று, என் ஊர் முற்றிலும் நகரமயமாக்கப்பட்டு உள்ளது. ஷிபிட் முறையில் எல்லாரும் வேறு வேறு வேலைக்கு செல்வதால் தோழமைக்கு நேரமில்லை. தெருக்களும் வெற்று சிமெண்ட் சாலைகளாய் காட்சியளிகிறது.

மாற்றங்கள் எங்கள் வீட்டு தறிக்கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து உபகரணங்களையும், விற்றுவிட்டார் எங்கள் சித்தப்பா. கரணங்கள் நிறையவே உண்டு. மேலே சொன்னதுபோல பாவு வரவு தட்டுப்பாடு, தாத்தாவை ஓய்வு பெற செய்ய, என சொல்லிக்கொண்டே போகலாம்.

எது எப்படி இருப்பினும், தறிக்குழியினுள் மண் அள்ளி போட்டவுடன் என் தாத்தாவின் கண்களில் இருந்து வழிந்த நீர் மிகவும் வலியுடையது. 'இனி நாம் பயன்படமட்டோமோ' என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி அது அவரை மேலும் முடக்கியது. ஆனால் இது அவருக்கு ஓய்வு தேவைப்படும் வயது என்பதை, மெல்ல புரியவைத்தார் என் சித்தப்பா.

இந்த மாற்றங்களால் பெரும் பயன் பெண்களுக்கே என்று சொல்லலாம். ஏனெனில், அச்சு பிணைப்பதிலும், நூல் இழைப்பதிலும் கிடைத்த வருமானத்தைவிட இப்போது நல்ல வருமானத்தில் வேலைசெய்கிறார்கள்.

ஊரில் முன்பு இருந்ததைவிட 4 மடங்கு மக்கட்த்தொகை பெருகிவிட்டது. புலம் பெயர்ந்த மக்களே அதிகம். எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தோர். கூடவே சுற்றுசுழல் மாசுபாடும் அதிகமாகிவிட்டது. சும்மா இருந்த தறி கூடத்தை, "நாளு செவுரு எழுப்பினா வாடகைக்காவது விடலாம் " என்ற யாருடைய யோசனையோ, உருவம் பெற்றது.

எங்கள் தறிக்கூடத்தில் எனக்கென ஒரு ஊஞ்சல் இருக்கும். என்னுடைய விடுமுறை தினங்களில் பெரும்பாலும் அங்கு தான் இருப்பேன். நான், தம்பி, வசந்தி, நித்தியா, காயத்திரி என எல்லோரும் விளையாடுவோம்.

எங்களை தன் உஞ்சளால் தாங்கி தாலாட்டிய எங்கள் தறிக்கூடம் முற்றிலும் தடம் இன்றி சிதைந்ததுவிட்டது.

" இது வரவேற்கதக்க மாற்றமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றம்."

எனக்கு என்ன வருத்தம் என்றால், முன்பு என் ஊரார் எல்லோரும் முதலாளிகளாய் இருந்தனர். ஆனால் இப்போது, ஏதோ ஒரு தொழிற்சாலையில் கூலிகளாய் இருகின்றனர். என்னால் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொங்கல், தீபாவளி போல பண்டிகை நாட்கள் என்றால் விடியற்காலை எல்லாம் தறி சப்தம் கேட்கும்.

ஆனால் இன்று,............... :-)

14 comments:

  1. வேதனை தான்!!

    கைத்தறி இருந்த வரை நம் கை, நம் தறி, நம் தொழில் என்று முதலாளிகளாய் இருந்தது மாறியுள்ளது இன்று!

    என்ன செய்ய, தேவைக்கு ஏற்ப உற்பத்தி என்கிற வணிக உலகத்தின் ஆதிக்கம் யாரை விட்டு வைத்தது..?!

    நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. தங்கை அவர்களே,

    நீங்கள் சொல்வது நிஜமே!
    நானும் நெசவாள்ர் குடும்பத்தை சேர்ந்தவன்தான்.எனது தாய் தந்தையர் தினமும் 16-மணிநேரம் தறிக்கூடத்தில் இருந்தவர்கள்.தற்போது அவர்கள் தலைமுறையோடு அது முடிந்தது.

    இன்றும் பலரும் எனது தந்தையை எனது ஊரில் பண்ணாடி (முதலாளி) என்றுதான் அழைப்பர். அவ்வளவு பேருக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில் இருந்தது. 16-தறி. மொத்தம் லுங்கி,காடா துணி,சேலை நெசவுதான்.

    என் அம்மா மூணுநாளில் ஒரு பாவை காலி செய்வார்கள். பாவு கொடுப்பவர்களே திணறுவார்களாம். உழைக்கிறதுக்கு அஞ்சாதவங்க!

    எனது தாத்தா தறியில் ஏற்படும் பழுதுகளை திறம்பட சரிசெய்வார்.

    காலத்துக்கு தகுந்த மாதிரி மாத்திக்கிடணும்னு சொல்லுறாங்க. 40-வருசமா ஒன்னையே பண்ணிக்கிட்டு திடீர்னு மாறச்சொன்னா அது முடியுமா?

    பரம்பரை சொத்தான தறியை விற்றும், அது கண்முன்னே விறகாக மாற கோடாலியால் வாங்கிய அடி இருக்கே.அந்த நெசவாளனையே கோடாலியால் பிளந்தால் கூட அவ்வளவு வலிச்சிருக்காது.

    நன்றி!
    காளிராஜ்
    kalirajkandasamy@yahoo.com

    ReplyDelete
  3. நானும் ஒரே அறை உள்ள பாட்டி வீட்டில் நான்கு தறிகளுக்கு இடையில் வளர்ந்தவன். எப்போதாவது போணி சுத்தித் தருவேன். நெசவாளிகளுக்கு அமாவசை மட்டும் விடுமுறை. அன்று வீட்டில் இட்லி பலகாரம் செய்வார்கள். மூன்று பெண்கள் அடுத்தடுத்த படியில் உட்கார்ந்து தலையை சரிசெய்வார்கள். கொடிய வறுமை சூழ்ந்திருக்கும். இப்போது வீடுவீடுக்கு பிள்ளைகளெல்லாம் படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள். வசதி கூடிவிட்டது. நெசவு அழிந்ததில் பெரிய வருத்தமில்லை என்றாலும் சொந்தபந்தகளோடு ஊரில் இருக்க முடியவில்லை என்பதுதான் மனதுக்கு கட்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. //இது வரவேற்கதக்க மாற்றமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றம்.//
    உண்மைதான்..பொருளாதார காரணங்களுக்கேனும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  5. //எங்கள் தறிக்கூடத்தில் எனக்கென ஒரு ஊஞ்சல் இருக்கும். என்னுடைய விடுமுறை தினங்களில் பெரும்பாலும் அங்கு தான் இருப்பேன். நான், தம்பி, வசந்தி, நித்தியா, காயத்திரி என எல்லோரும் விளையாடுவோம்.

    எங்களை தன் உஞ்சளால் தாங்கி தாலாட்டிய எங்கள் தறிக்கூடம் முற்றிலும் தடம் இன்றி சிதைந்ததுவிட்டது.

    " இது வரவேற்கதக்க மாற்றமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றம்."

    எனக்கு என்ன வருத்தம் என்றால், முன்பு என் ஊரார் எல்லோரும் முதலாளிகளாய் இருந்தனர். ஆனால் இப்போது, ஏதோ ஒரு தொழிற்சாலையில் கூலிகளாய் இருகின்றனர். என்னால் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

    உங்கள் பதிவை படித்து முடித்த பிறகும், அதிர்வு தொடர்கிறது.

    ReplyDelete
  6. பதிவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தின் ஆழம் வீரியமானது...

    பதிவிட்டநாள் முதல் இன்று வரையிலும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். எந்த முடிவும் தோன்றவில்லை...

    ஒன்று மட்டும் புரிந்தது. காலம் நம்மை மாற்றிக்கொண்டேயிருக்கிறது...

    ReplyDelete
  7. ////எங்களை தன் உஞ்சளால் தாங்கி தாலாட்டிய எங்கள் தறிக்கூடம் முற்றிலும் தடம் இன்றி சிதைந்ததுவிட்டது.////////

    உண்மைதான் மிகவும் வேதனையின் உச்சம்

    ReplyDelete
  8. //என்ன செய்ய, தேவைக்கு ஏற்ப உற்பத்தி என்கிற வணிக உலகத்தின் ஆதிக்கம் யாரை விட்டு வைத்தது..?!
    //
    சரியாய் சொன்னிங்க ரங்கா... நன்றி...

    ReplyDelete
  9. பகிர்விற்கு நன்றி காளிராஜ்.....

    ReplyDelete
  10. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி குலவுசனப்பிரியன்...

    ReplyDelete
  11. //இது வரவேற்கதக்க மாற்றமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றம்.//
    உண்மைதான்..பொருளாதார காரணங்களுக்கேனும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
    //////////

    சரியாய் சொன்னிங்க பழனிசாமி... ஆனால் மாற்றங்கள் கொஞ்சம் வலிக்கும்ல... அதோட பிரதிபலிப்பு தான் இந்த பதிவு...

    ReplyDelete
  12. //உங்கள் பதிவை படித்து முடித்த பிறகும், அதிர்வு தொடர்கிறது. //

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மனோ.
    :)

    ReplyDelete
  13. //பதிவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தின் ஆழம் வீரியமானது...

    பதிவிட்டநாள் முதல் இன்று வரையிலும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். எந்த முடிவும் தோன்றவில்லை...

    ஒன்று மட்டும் புரிந்தது. காலம் நம்மை மாற்றிக்கொண்டேயிருக்கிறது... //

    கருத்திற்கும், பிழைகளின் திருத்ததிற்கும் நன்றி ஜெய்...

    ReplyDelete
  14. வருகைக்கு மிக்க நன்றி சங்கர்...
    :-)

    ReplyDelete